ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (11:28 IST)

வீட்டை மீறி காதல் திருமணம்; பெண்ணை வீடு புகுந்து தூக்கிய உறவினர்கள்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Kidnap
தென்காசியில் பெற்றோர் சம்மதத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை உறவினர்கள் வந்து வீடு புகுந்து கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதேபகுதியை சேர்ந்த நவீன் படேல் என்ற குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரின் மகள் கிருத்திகாவும் பள்ளி பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்கள் காதலுக்கு கிருத்திகாவின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த டிசம்பர் 27ம் தேதி கிருத்திகா வீட்டை விட்டு வெளியேறி வினித்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் நவீன் படேல் மற்றும் குடும்பத்தினரால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்குமாறும் வினித் – கிருத்திகா தம்பதியினர் காவல்நிலையத்தில் மனு அளித்திருந்துள்ளனர்.

இந்நிலையில் தென்காசி குத்துக்கல்வலசையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வினித் – கிருத்திகா சென்றிருந்த நிலையில் அங்கு வந்த கிருத்திகாவின் உறவினர்கள் அங்கிருந்த வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி விட்டு கிருத்திகாவை வலுகட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் வினித் குடும்பத்தினர் புகார் அளித்துள்ள நிலையில் இளம்பெண்ணை உறவினர்கள் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K