திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:07 IST)

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால், சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று சில மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிக்கு விடுமுறை என்றும் சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று, அதாவது நவம்பர் 29 ஆம் தேதி, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

சற்றுமுன் வந்த தகவல்படி, சென்னையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடர்ச்சியான மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva