1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (17:16 IST)

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது - சிறையில் முகிலனுக்கு ஆபத்து (வீடியோ)

தமிழ் பிரிவினைவாதி என்று தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள, முகிலனுக்கு ஆபத்து இருப்பதாகவும், கொத்தடிமை போல சிறையில் கொடுமை படுத்துவதாகவும் கரூரில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டுள்ளது.

 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பிலும், சாமானிய மக்கள் கட்சி., மே 17 இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட உள்ளிட்ட கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனுக்கள் அளித்தனர்.
 
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பாளர் முகிலன், கனிம வள இயற்கையை பாதுகாக்க சட்டத்திற்குட்பட்டும் அரசு, காவல்துறை அனுமதி பெற்றும், உயர்நீதிமன்றம் அனுமதி பெற்றும், நீண்ட நாட்களாக போராடி வரும் நிலையில், அவர் மீது, கரூர் மாவட்டம், சீத்தப்பட்டி காலனி என்ற இடத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் பேசியதற்காக, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போலீஸார் கடந்த வருடம் (2017), டிசம்பர் மாதம் 17 ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். மேலும், கூட்டம் நடந்து 8 மாதங்களுக்கு பிறகு போலீஸார் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி கரூர் கோர்ட்டிலும் ஆஜர் படுத்திய நிலையில், தற்போது பாளையங்கோட்டை சிறையிலிருந்து, மதுரை சிறைக்கு மாற்றியதோடு, அவருக்கு எந்த ஒரு சுகாதாரமின்றி தண்ணீர் கூட இல்லாமல் கொத்தடிமை போல நடத்துவதாக புகார் எழுந்தது.
 
இதனையறிந்து கரூர் மாவட்டத்தில் உள்ள சமூக நல ஆர்வலர்கள், மற்ற இதர கட்சியினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் கோரிக்கை விடுத்ததோடு, ஜனநாயக முறையின் படி நடவடிக்கை எடுக்கும்படியும், வேணடுமென்றே பொய் வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை பழிவாங்கும் நடவடிக்கையில் அவரை கொத்தடிமையாக நடத்துவதாகவும் புகார் அளித்தனர். மேலும், தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளருக்கு அவர்கள் அஞ்சல் மூலமாக இந்த கோரிக்கையையும் மனுக்களாக அனுப்பினர்
 
பேட்டி : கே.ஆர்.எஸ்.மணியன் – ஒருங்கிணைப்பாளர் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் 
 
-சி.ஆனந்தகுமார்