1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:27 IST)

இனிமேல் யாரும் டார்ச் லைட்டை யூஸ் பண்ணாதீங்க! – ஸ்டிக்கரை நீக்கிய மய்யம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் தங்களது வாகனங்கள் மற்றும் பதாதைகளில் இருந்து டார்ச் லைட் சின்னத்தை நீக்கியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசனை வரவேற்ற மய்யத்தினர் கட்சி சின்னமான டார்ச் லைட்டை அடித்து வரவேற்றனர்.

இந்நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியபோது மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று வரை கமல்ஹாசனின் பிரச்சார வாகனங்களில் இடம்பெற்ற டார்ச் லைட் சின்னத்தின் ஸ்டிக்கர் இன்று நீக்கப்பட்டுள்ளது. பிரச்சார கூட்டங்களிலும் டார்ச் லைட்டை தொண்டர்கள் பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.