வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (18:46 IST)

பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அரசு தோல்வி : ராமதாஸ் தாக்கு

பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளதாவது:
 
சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 5 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை. இவ்வழக்கில் காவல்துறையின் செயல்படாத தன்மைக்கு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இக்கண்டனத்திற்கு தமிழக அரசும், காவல்துறையும் மிகவும் தகுதியானவையாகும்.
 
சுவாதி படுகொலை வழக்கை முதலில் விசாரித்த தொடர்வண்டிக் காவல்துறை மூன்று நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பிறகு நேற்று முன்நாள் இப்பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு கண்டனம் தெரிவித்ததால் தான் இவ்வழக்கு சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இல்லாவிட்டால் இவ்வழக்கு இன்னும் தொடர்வண்டிக் காவல்துறையின் கட்டுப்பாட்டில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்தான் இருந்திருக்கும்.
 
தொடர்வண்டிக் காவல்துறையும், சென்னை மாநகரக் காவல்துறையும் தமிழகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன; தொடர்வண்டிக் காவல்துறையிடம் இத்தகைய சிக்கலான வழக்குகளை விசாரிப்பதற்கான கட்டமைப்புகள் இல்லை என்பதெல்லாம் காவல்துறை தலைவருக்கும், தமிழக அரசுக்கும் தெளிவாக தெரியும். ஆனாலும், கொலை நடந்த அன்றே இவ்வழக்கை சென்னை மாநகரக் காவல்துறைக்கோ, சி.பி.சி.ஐ.டி.க்கோ மாற்ற தமிழக அரசும், காவல்துறை தலைமையும் தவறிவிட்டன. இதிலிருந்தே இந்த வழக்கில் கொலையாளியை கைது செய்ய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர முடியும்.
 
சுவாதி கொலை செய்யப்பட்ட பின் கொலையாளியை கண்டு பிடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, இந்த கொலையே நடக்காமல் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் தமிழக அரசு காட்டும் அக்கறையை நிரூபிப்பதாக அமைந்திருக்கும். பொது இடங்களில் மக்களை பாதுகாக்க போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான், மக்களின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் 10 வினாக்களை எழுப்பியிருக்கிறது. இவற்றுக்கு தமிழக அரசால் பதிலளிக்க முடியாது. காரணம் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஜெயலலிதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘காவல் துறையினரின் தேவையற்ற வேலை பளுவை குறைத்து, மக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, முக்கிய தலைவர்கள் பாதுகாப்பு என காவல்துறையில் பல பிரிவுகள் பிரிக்கப்பட்டு, காவலர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழி வகை செய்யப்படும். அனைத்து காவல் நிலையங்களும் மின் அணு ஆளுமையின் கீழ் கொண்டுவர திட்டங்கள் தீட்டப்படும். புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீனப்படுத்தப்படும். காவல் துறையின் அதிரடிப்படை, சிறப்பு காவல் படை போன்றவைகளின் எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டு, செயல்பாடுகள் நவீனபடுத்தப்படும். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இவற்றில் ஒற்றை வாக்குறுதியைக் கூட தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
 
தமிழக காவல்துறையின் பல பிரிவுகளில் காவலர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த அதிமுக, காவலர்கள் எண்ணிக்கையை குறைத்ததுதான் மிச்சம். தேசிய சராசரிப்படி தமிழக காவல்துறையில் 1.70 லட்சம் பேர் இருக்க வேண்டும். ஆனால், அனுமதிக்கப் பட்ட அளவு 1.21 லட்சம் மட்டுமே. இதில்கூட 21 ஆயிரம் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. பிற மாநிலங்களில் சராசரியாக 500 பேருக்கு ஒரு காவலர் இருக்கும் நிலையில், தமிழகத்தில் சராசரியாக 800 பேருக்கு மட்டுமே ஒரு காவலர் உள்ளார். இந்த எண்ணிக்கையில் காவலர்களை வைத்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை காப்பது என்பது வெறும் கனவாகவே இருக்கும். புதிய காவலர்களை தேர்ந்தெடுத்து துறையை வலுப்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு தோற்றுவிட்டது.
 
அதேபோல், 2012 ஆம் ஆண்டு இறுதியில் தில்லியில் ஓடும் பேரூந்தில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பெண்களின் பாதுகாப்புக்காக 13 அம்சத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். அதில் 12-ஆவது திட்டத்தில்,‘‘14.12.2012 அன்று நகராட்சி நிர்வாகத் துறையினால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் (CCTV) நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பெண்களுக்கு இன்னல் தரும் நபர்கள் அல்லது அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
 
மேலும், 13-ஆவது திட்டமாக,‘‘பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தைச் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் அறிவிப்புடன் நின்றுவிட்டது. இந்த இரு அறிவிப்புகளை செயல்படுத்தியிருந்தாலே சுவாதிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு செயல்படுத்தாத அரசாக தமிழக அரசு இருப்பதால் தான் பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. மக்களை பாதுகாப்பதில் அனைத்து வழிகளிலும் அதிமுக அரசு தோற்றுவிட்டதற்கு இதுவே உதாரணம்.
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகாவது, மத்திய அரசுடன் இணைந்து பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பொது இடங்களில் பெண்கள் அச்சமின்றி நடமாடும் நிலை உருவாகும்.