எடப்பாடி பழனிச்சாமியும்; பிக் பாஸ் ஐஸ்வர்யாவும்

Last Updated: புதன், 12 செப்டம்பர் 2018 (14:10 IST)
பொய்கள் நிஜங்களாகவும் நிஜங்கள் பொய்களாகவும் ஆகிவிட்ட காலம் இது. வழிகாட்டல்கள் தவறாகிப் போனதனால் தமிழகம் தரம் இழந்து நிற்கின்றது. இந்த அரசு நம்பர்கள் இல்லாத அரசு மட்டும் அல்ல, மக்களின் நம்பிக்கையை இழந்த அரசு.  எங்கும் ரைடு மயம்; எங்கும் பய மயம்; இந்த சந்தர்ப்பவாதிகள் ஒரு ஒரு  ரெய்டுக்கும் ஒரு கதை வைத்து இருப்பார்கள். ஜெயலலிதா என்னும் கருத்து நூல் அறுந்து, பழனிச்சாமி என்னும் பருத்தி நூல் பலம் இழந்த மண்டி இட்டு கிடக்கிறது.

 
என்ன ஒரு அவமானம்
 
ஓ.பி.எஸ்  தொடங்கி விஜய பாஸ்கர் வரை தங்க மணி, ரெங்க மணி வகையறாக்கள் தொட்டு அனைவரும் வலுவாக சிக்கிக் கொண்டபின்பும் யார் இந்த அரசை தாங்கிப் பிடிக்கிறார்கள்?. இவர்கள் எல்லாம் தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டவர்கள், அந்த சூனியத்தை எடுக்க மந்திரவாதிகளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் மதுவை அருந்தி இருக்கும் இந்த அரசியல்வாதிகள் ஜனநாயகத்தின் மாண்பில் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். 
 
மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர், தன் மக்கள் நலம் ஒன்றை மட்டும் பேணுபவர். மாண்பு மிகு முதலமைச்சர் பொதுப்பணி காண்ட்ராக்ட்டை தனது சம்மந்திக்கேக் கொடுத்து சிவந்தவர். ரெட்டிகளிடம் சில ரொட்டித் துண்டுகளுக்கு    விலைப் போனவர்  மாண்பு மிகு தர்ம யுத்தம்.

 
கேஸ் 1, கேஸ் 2, கேஸ் 3, கேஸ் 4 என வட இந்திய ஊடகங்கள் தமிழக மந்திரிகளின் ஊழல் சேலையை துகில் உறிக்க அம்பலமாய் அவர்கள். இந்த விஷயத்தில் தமிழக ஊடகங்கள் விலை போன மர்மம் தான் என்னவோ? நேற்று தலைமை செயலகம்;  இன்று கமிஷனர் அலுவலகம்; நாளை முதலமைச்சர் வீட்டிலே ரெய்டு நடந்தாலும் இந்த அரசு தொடரும். காரணம் அவர்கள் மானஸ்தர்கள்.

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா
 
இந்த அரசின் நுனி யாரிடம் உள்ளது? ஸ்டெர்லைட் தொடங்கி 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு  தொட்டு எட்டுவழிச்சாலைகள்  வரை, யார் இந்த அரசைக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது யார்? சில நேரம் தட்டியும், பல நேரம் முத்தமிட்டும் இவர்களை வழி நடத்தும் கலாபக்  காதலன் யாரோ?  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா பல தவறுகள் செய்தப்போதும், தொடர்ந்து மக்களால் பார்வையாளர்களால் வெறுக்கப்படுபவராக இருந்த போதிலும் ஆண்டவரால் காப்பாற்றப்பட்டு வருகிறாரே அதைப்போலத் தான் இந்த அரசும், டெல்லிச் சாமியால் காப்பாற்றப்பட்டு வருகிறார் இந்த பழனிச்சாமி. 

இரா காஜா பந்தா நவாஸ்


இதில் மேலும் படிக்கவும் :