1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (10:59 IST)

இது நாகலாந்து இல்லை.. தமிழ்நாடு..! – ஆளுனர் பேச்சுக்கு கண்டனம்!

நீட் தேர்வு மற்றும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஆளுனர் பேசியதற்கு திமுக நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல காலமாக கோரிக்கைகள் இருந்து வருகிறது. அதுபோல புதிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வரப்படும் மும்மொழி கொள்கையையும் ஏற்க இயலாது என தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் குடியரசு தினத்தின்போது தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில் நீட் தேர்வு மற்றும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள விமர்சனத்தில் “பல பிரச்சினைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும். அதிலே ஒன்று இருமொழி கொள்கை, மற்றொன்று நீட் வேண்டாம் என்பது. ஆளுனர் ரவி இதனை உணர்ந்து உரிய தகவலை மேலிடத்துக்குத் தந்து ஒட்டு மொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் பெற்று தர முயற்சிக்க வேண்டும். இது நாகலாந்து அல்ல தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்” என தெரிவித்துள்ளது.