இனி புதிய பைக், கார் வாங்கினால் ஆர்.டி.ஓ.வுக்கு போக வேண்டாம்: வாகனப்பதிவு டிஜிட்டல் மயம்!
தமிழக போக்குவரத்துத் துறை, புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்குவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி, சொந்த பயன்பாட்டிற்கான புதிய வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் கொண்டு சென்று ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய நடைமுறை டிசம்பர் 1 முதல் அதாவது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசின் சட்டத்திருத்தம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வாகன விற்பனையாளர்களே பதிவு நடைமுறையை ஆன்லைனில் முடிப்பார்கள். டீலர்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை 'வாகன்' இணையதளம் மூலம் பதிவேற்றி, ஆதார் சரிபார்ப்புக்கு பின் பதிவுக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவார்கள். உடனடியாக பதிவு எண் ஒதுக்கப்படும்.
இதனால், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காத்திருக்கும் அலைச்சல் குறைகிறது. மேலும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிந்து, பதிவு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். வணிக வாகனங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே நேரடி ஆய்வு தேவைப்படும்.
இந்த டிஜிட்டல் நடவடிக்கை, தினமும் சுமார் 8,000 வாகனங்களை வாங்கும் லட்சக்கணக்கான தமிழக மக்களுக்குப் பயனளிக்கும்.
Edited by Siva