தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் போது டெங்கு நோயும் கூடவே வரும் நிலையில், இந்த ஆண்டும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள சூழ்நிலையில், கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு டெங்கு குறித்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 3665 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள், குறிப்பாக ஏடிஎஸ் வகை கொசுக்களால் ஏற்படும் டெங்கு பாதிப்பு குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நீர் நிலைகள், குளம், குட்டைகள், ஓடைகள் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், வீட்டின் அருகே தண்ணீர் தேங்காதவாறு கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva