திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (09:49 IST)

தூய்மை பணியாளர்கள் கைது! அரசை விட்டுவிட்டு காவல்துறையை விமர்சித்த வன்னி அரசு!

Vanni arasu

சென்னையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சென்னை மாநகராட்சி தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம் முன்பாக தூய்மை பணியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசின் சமாதான பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் அவர்கள் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் இவ்வாறாக போராடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றமும் கூறியிருந்தது.

 

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து பேசியுள்ள விசிகவை சேர்ந்த வன்னி அரசு “நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் காவல்துறை கைது செய்ததுடன், சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்துள்ளனர். ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

காவல்துறையின் இந்த போக்கு கண்டனத்திற்குரியது. நீதிமன்றமும், காவல்துறையும் சேர்ந்து மக்களுக்கு எதிராக நடத்தும் இந்த விரோத போக்கு கவலை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு, வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்” என பேசியுள்ளார்.

 

நீதிமன்றமும், காவல்துறையும் இணைந்து மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவும், இதில் அரசுக்கு சம்மந்தமே இல்லை என்பது போலவும் வன்னி அரசு பூசி மெழுகி தெரிவித்துள்ள இந்த கண்டனம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

Edit by Prasanth.K