1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (21:50 IST)

மெரினாவில் போராட தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அய்யாகண்ணுக்கு மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். 
 
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளதால் அய்யாக்கண்ணுவிற்கு மெரினாவில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
போராட்டம் நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை காவல்துறை மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று மாலையே விசாரிக்கப்பட்டது.
 
எப்படி போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறதோ. அதேபோன்று, இடத்தை முடிவு செய்கிற அதிகாரம் சென்னை மாநகர காவல் சட்டத்தின் படி காவல் ஆணையருக்கே உள்ளது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கவில்லை. இடத்தைதான் தீர்மானிக்கிறோம் என்று காவல்துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
உயர் நீதிமன்றம், சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி தந்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், அரசு ஒதுக்கிய 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரினால் அரசு பரிசீலிக்கலம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.