சீமான் பேசியதை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டவர் மீது தாக்குதல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 29 அக்டோபர் 2015 (14:57 IST)
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் பேசிய உரையாடலை பதிவு செய்து வாட்ஸ்- அப்பில் வெளியிட்ட பத்திர எழுத்தரை தாக்கிய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
தேனி, சிவாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். தேனி, என்.ஆர்.டி.நகரில் பத்திர எழுத்தர் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர், கடந்த செவ்வாய்கிழமை (அக்.27) நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு திருப்பூரில் திருமலை நாயக் கரை விமர்சித்து பேசியது தொடர்பாக கேட்டுள்ளார்.
 
இதில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சீமான் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். சீமான், ஜெகதீசன் இடையே செல்லிடப் பேசியில் நடை பெற்ற உரையாடல் புதன்கிழமை வாட்ஸ் -அப்பில் வெளியானது.
 
இதையடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் ஜெகதீசனின் அலுவலகத்திற்குச் சென்று அவரைத் தாக்கி காயப்படுத்தி, அலுவலகத்தில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். பின்னர் அவரை தாக்கியபோது எடுத்த புகைப்படத்தையும் முகநூலில் வெளியிட்டனர்.
 
காயமடைந்த ஜெகதீசன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெகதீசன் மீது தாக்குதல் நடைபெற்ற அவரது அலுவலகத்தை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெ.மகேஷ், தேனி காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
 
இதுகுறித்து ஜெகதீசன் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஆறு பேர் மீது தேனி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :