ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு

கோவை மாவட்டம்  கிணத்துக்கடவு தாலுக்கா காணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. 72 வயதான இவருக்கு காணியம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிராமத்தில் சுமார் 32 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. 
 
அதில் 23 ஏக்கர் நிலம் இவரது மகன் கிருஷ்ணராஜ் பெயரில் இருப்பதாக தெரிகிறது.  மீதமுள்ள சுமார் 8 ஏக்கர் நிலத்தில் குப்புசாமி விவசாயம் செய்து வருகிறார். 
 
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு குப்புசாமியின் மனைவி இறந்துவிட்ட நிலையில் குப்புசாமி, மகள் மற்றும் மருமகனுடன் பொள்ளாச்சி நெகமம் பகுதியில் வசித்து வருகிறார். 
 
கிருஷ்ணராஜனின் மாமனார் அழகப்பன் திமுக கட்சியில் நகர அவை தலைவர் பொறுப்பு வகித்து வரும் நிலையில் குப்புசாமியின் அனைத்து சொத்தையும் கிருஷ்ணராஜ் அவரது மாமனார் அழகப்பனுடன் இணைந்து அபகரிக்க முயற்சிப்பதாகவும் அனைத்து சொத்துக்களும் வேண்டுமென தன்னையும் தனது மகள் மற்றும் மகளின் கணவரை அந்த இடத்திலிருந்து துரத்திவிட்டு தற்பொழுது அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் செய்வதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும்  குற்றம் சாட்டிய குப்புசாமி அவரது மருமகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.
 
மனு வந்த குப்புசாமி திடீரென மண்ணெணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி தற்கொலையை தடுத்து நிறுத்தி அவரை சமாதானப்படுத்தினர்
 
அப்போது தன்னை விட்டு விடுங்கள் நான் இறந்து விடுகிறேன், திமுக அவை தலைவர் அழகப்பனால் நான் இறந்து விட போகிறேன் என்று கூச்சலிட்டார்.  பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நடைபெற்ற இந்த தற்கொலை முயற்சி சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.