1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள்: மத்திய அரசிற்கு உச்ச நீதி தாக்கீது!

முகுல் ரொஹாத்கி சத்ரபதி சிவாஜி இரயில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன்
மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் போல் எதிர்காலத்தில் நடந்தால் அதனை காவல் துறையினர் முழுத் திறனுடன் சமாளிக்கத் தேவையான நவீன ஆயுதங்களை அளிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

மும்பைத் தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் நமது காவலர்களிடம் இருந்த ஆயுதங்கள் மிகச் சாதாரணமானவை என்றும், இந்த நிலை எதிர்காலத்திற்கும் தொடராமல் இருக்க காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் கொண்ட தலைமை அமர்வு இந்த உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.

காவல் துறையினர் அதி நவீன ஆயுதங்களுடன் பொது இடங்களில் நின்றால் அதுவே சாதாரண மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் போல ஆகுமே என்று நீதிபதிகள் வினவினர்.

இதற்கு பதிலளித்த சொராப்ஜியின் வழக்கறிஞர் முகுல் ரொஹாத்கி, மும்பை சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலை சுட்டிக்காட்டி, அங்கிருந்த காவலர்கள் வைத்திருந்த சாதாரண துப்பாக்கிகள், பயங்கரவாதிகளின் கையில் இருந்த துப்பாக்கிகளோடு ஒப்பிடத்தக்கவையல்ல என்று கூறினார்.

இதனையடுத்து மனுவின் மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசிற்கு தாக்கீடு அனுப்ப நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
About Writer
Webdunia