1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜிப்மர் அங்கீகாரம் : டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு!

ஜிப்மர் அங்கீகாரம் டெல்லி போராட்டம்
புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் பழைய அந்தஸ்து தொடர வேண்டும் என்று போராட்டம் நடத்திவரும் குழுவினர், டெல்லியில் மூன்று கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

புதுவையில் ஜவஹர்லால் இன்ஸ்டியூட் ஆஃப் போஸ்ட்கிராஜூவேட் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ஜிப்மர் என அழைக்கப்படுகிறது.

புதுவையில் இயங்கிவரும் ஜிப்மர் மருத்துவமனையும், அதனுடன் இணைந்த கல்லூரியும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இநத அந்தஸ்து வழங்குவதால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் சுயேச்சையாக இயங்க முடியும். மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியை விரிவுபடுத்த முடியும். மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்புகளை தொடங்க முடியும். இதற்கு தேவையான நிதியை சொந்தமாக திரட்ட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனால் இதற்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சியினர். வர்த்தக சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஜிப்மருக்கு தன்னாட்சி வழங்குவது என்ற பெயரில், தனியார் மயமாக்கும் முயற்சியே. இதனால் ஏழை, எளிய பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாது. தற்போதுள்ள இலவச சிகிச்சை என்பது மாறி, கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அச்சப்படுகின்றனர்.

மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு நன்கொடை, கல்விக் கட்டணம் என இலட்சக்கணக்கில் செலுத்த வேண்டியதிருக்கும். இதனால் கீழ்மட்ட, நடுத்தர வருவாய் பிரிவினரின் பிள்ளைகள் மருத்துவக் கல்லலூரியில் சேர்ந்து படிப்பது என்பது கனவாக ஆகிவிடும் என அச்சப்படுகின்றனர்.

மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறக் கோரியும், ஜிப்மர் மருத்துவமனைக்கு பழைய அந்தஸ்து தொடர வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வர்த்தக பிரமுகர்கள் அடங்கிய நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் மூன்று கட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியில் நடத்தப் போகும் போராட்டம் பற்றி, நடவடிக்கை குழுவின் தலைவர் டி. முருகன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது அவர், புது டெல்லியில் போராட்டம் நடத்துவது என்ற முடிவு அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இநத கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.பி., குடியரசு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், புதுவை மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நடவடிக்கை குழு இலவச மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும், ஊழியர்களின் தற்போதைய நிலையே தொடர வேண்டும், சி, டி பிரிவு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் போது புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், மருத்துவ கல்லூரியில் 20 விழுக்காடு இடங்கள் புதுவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப் போகின்றோம்.

இதில் இரண்டு அம்சங்கள் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு, செப்டம்பர் 7 ந் தேதி மாநிலக்களவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் இந்த கோரிக்கைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே போராட்டத்தை தொடருவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தின் முன்பு தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை. இந்த போராட்டத்திற்கு சமாஜ்வாதி கட்சியும், தெலுங்கு தேச கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் முருகன் தெரிவித்தார்.

புதுவை மருத்துவமனையில் புதுவை மாநிலத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, தமிழ் நாட்டின் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவு சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.