1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌த‌மிழ‌ர் இன‌ப் படுகொலை : ‌சிறில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி‌யிட‌ம் ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம் விசாரணை!

‌த‌மிழ‌ர் இன‌ப் படுகொலை சரத் பொன்சேகா ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம்
சிறிலாங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக ஆஸ்ட்ரேலியா நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

ஆஸ்ட்ரேலியாவில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழர் பிரதிநிதிகள் தொடர்பான வழக்கில் சரத் பொன்சேகா சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரிடம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத்தி‌ன் படுகொலைகள், தமிழ் மக்கள் மீதான வ‌ன்முறைகள், பள்‌ளி‌க்கூட‌ங்கள் மற்றும் வடபகுதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விமான‌ப்படைத் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டது.

ஆனால் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா இராணுவம் பொறுப்பல்ல என்று சரத் பொன்சேகா மறு‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக‌ச் ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் நபர்களை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் கொடுமையான சித்திரவதைகளுக்கு சிறிலங்கா அரசு உள்ளாக்குவதாகவும் இது தொடபாக உங்கள் கருத்து என்ன" என்று தமிழர் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர் பிலிப் பௌல்ட்டன் கேள்வி எழுப்பினார்.

"இதனை நான் ஏற்கவில்லை. மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடி‌க்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். மனித உரிமைகளை நா‌ங்க‌ள் மீறவில்லை" என்று சரத் பொன்சேகா பதிலளித்தார்.

அதேபோல் நேற்று நடைபெற்ற விசாரணையின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அர‌சி‌ற்கு எதிரான "இறுதி யுத்தம்" என்ற பெயரில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளே போ‌ர் நிறுத்த ஒப்பந்தத்தை 6 ஆயிரம் முறை மீறியுள்ளனர் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழர் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர்களோ, போ‌ர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசே மீறுவதாக குற்றம்சாட்டினர்.

வடபகுதி ப‌‌ள்‌ளி‌க்கூட‌ங்கள் மற்றும் தேவாலயங்கள் மீது சிறிலங்கா ‌விமான‌ப் படை தாக்குதல் நடத்தவில்லை என்று சரத் பொன்சேகா மறுத்தார்.

ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் மட்டக்களப்பு பகு‌தியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த ப‌ள்‌ளி‌க்கூட‌ம் மீது ‌விமான‌ப்படை‌த் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அ‌ந்‌நிக‌ழ்வு நடந்தது உண்மை என்று சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டார்.

"இடம் பெயர்ந்த அகதிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் இருந்தனர். எனவே உள்நோக்கம் ஏதும் எ‌ங்களு‌க்கு இல்லை. அது எ‌ங்களது தவறும் இல்லை" என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார். அ‌ந்‌நிக‌ழ்‌வி‌ல் 62 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை சரத் பொன்சேகா மறுத்ததுடன் 17 பேர்தா‌ன் உயிரிழந்தனர் என்றும் கூறினார்.