1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

பணவீக்கம் தொட‌ர்‌ந்து அதிகரிப்பு!

பணவீக்கம் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உணவுப் பொருட்க‌ள்
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை இல்லாத அளவில் மார்ச் 15 ஆ‌ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 6.68 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பணவீக்கம் 5.92 விழுக்காடாக இருந்தது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சில நாட்களுக்கு முன்பு அரசு பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வாரம் பணவீக்கம் மேலும் உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 6.56 விழுக்காடாக இருந்தது.

மார்ச் 15ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எல்லா பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் 223.6 ஆக அதிகரித்து உள்ளது. இது சென்ற வாரம் 221.8 ஆக இருந்தது.

உணவுப் பொருட்களின் விலை குறியீட்டு எண் 0.2 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 225.9 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் பார்லி, மைசூர் பருப்பு, காய்கறிகள், பழங்கள், உளுந்தம் பருப்பு உட்பட பருப்பு விலைகள் அதிகரித்து உள்ளது.

ரவை, கடுகு எண்ணெய், மைதா, தேங்காய் எண்ணெய், நாட்டு சக்கரை, நல்லெண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

எண்ணெய் கடுகு, ரப்பர், பருத்தி, கொப்பரை தேங்காய், ஆமணக்கு விதை ஆகியவற்றின் விலை அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் சூரிய காந்தி எண்ணெய் வித்து, நிலக்கடலை விலை குறைந்துள்ளது.

தவிட்டு எண்ணெய், கடலை எண்ணெய் நெய், உப்பு விலைகள் குறைந்துள்ளன.

தொழில் துறைக்கு தேவையான நாப்தா, எரி எண்ணெய், உலோக பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.