புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 12 செப்டம்பர் 2022 (12:47 IST)

முன்பகை காரணமாக சிறுமிக்கு தீ வைப்பு! மணிக்கணக்கில் போராடிய சிறுமி!

Fire
உத்தர பிரதேசத்தில் தன்னை அடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் வன்கொடுமை செய்து தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடண்டா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அச்சிறுமி பள்ளி செல்லும் வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அவரை பாலியல்ரீதியாக சீண்டுவதும், வம்பு இழுப்பதுமாக இருந்துள்ளனர்.

ஒருநாள் அதுபோல தன்னை சீண்டிய தினேஷ் யாதவ் என்ற இளைஞரை சிறுமி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் கோபமடைந்த தினேஷ் தனது நண்பர் அமர் சிங்குடன் சேர்ந்து அந்த சிறுமியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.


கடந்த சில நாட்கள் முன்னதாக சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயம் அங்கு நுழைந்த தினேஷும், அமர் சிங்கும் சிறுமியின் வாயை துணியால் கட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மதிய நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை தீயில் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்த தனது மகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது வரை அபாயகரமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது மேற்படி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் தினேஷ் யாதவ், அமர் சிங் இருவரையும் கைது செய்துள்ளனர்.