முதலில் உள்ளாடை உடுத்துங்கள்! ஆண்களுக்கு நிகராக அப்புறம் மாறிக்கிடலாம்: மதகுருவின் சர்ச்சை பேச்சு
சமீபத்தில் நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரதமரை சந்தித்தபோது அணிந்த உடை குறித்து சர்ச்சைகள் எழுந்தது. இதுகுறித்து மிர்ரர் டிவியில் விவாதம் ஒன்று இன்று நடந்தது. இந்த விவாதத்தில் இஸ்லாமிய மதகுரு மவுலானா அப்பாஸ் யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் இடையே பேசிய மதகுரு மவுலானா அப்பாஸ் யூசுப், 'ஆண்களுக்கு நிகராக மாறவேண்டும் என்றால் முதலில் உள்ளாடை அணிந்து கொண்டு விவாதம் செய்யுங்கள், சமத்துவம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்று கூறினார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தால் அந்த விவாதத்தில் சில நொடிகள் மெளனம் ஏற்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளினி அழுத்தந்திருத்தமாக தனது பதிலடியை தொடங்கினார். அவர் கூறியதாவது: இவ்வாறு நீங்கள் கூறுவதன் மூலம் நான் கோபப்படுவேன் என்று கருதியிருப்பார். ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். உங்களைப்போல் பலரை பார்த்துள்ளேன். நீங்கள் என்னை கீழ்த்தரமான முறையில் பயமுறுத்துகிறீர்கள். நான் என் வேலையை செய்து கொண்டிருக்கும் போது கோபப்படுத்தப்பார்க்கிறீர்கள். நீங்கள் இப்படி பேசினால் பெண்கள் அனைவரும் சமையலறைக்குள் சென்றுவிடவேண்டும் என்று கருதுகிறீர்கள்.
பாத்திமா சனா, சானியா மிர்சா போன்ற பெண்கள் தங்களின் வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் மவுலானா ஜி, நாங்கள் எங்கேயும் சென்றுவிட மாட்டோம் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிலடிக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.