1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (18:14 IST)

தமிழருக்கு எட்டாத தூரத்தில் "பிரதமர் பதவி"

தென் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூட, இந்தியாவின் பிரதமர் ஆக முடியாமல் போனதற்கு பல காரணங்கள் நிலவுகின்றன. அதற்கான பின்னணியில் அமைந்த அடிப்படை காரணங்களை இந்த கட்டுரை அலசுகிறது.
நடைமுறை தகுதி எவை?
 
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அமலுக்கு வந்த ஜனநாயக கட்டமைப்பில், இந்திய பிரதமர் ஆகும் வாய்ப்புக்கு சில நடைமுறைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவை பொருத்தவரை, மாநில அளவில் இயங்கும் கட்சிகள், தேசிய அளவில் இயங்கும் கட்சிகள் உள்ளன. இதில், தேசிய கட்சிகள் தனித்தோ அல்லது மாநில அளவிலான கட்சிகளின் துணையுடனோ மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை சூழ்நிலையின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
 
அந்த வகையில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 முதல் 1964-ஆம் ஆண்டுவரை பிரதமராக நீடித்த ஜவஹர்லால் நேரு தொடங்கி 1966 முதல் 1977-ஆம் ஆண்டுவரை பிரதமராக நீடித்த இந்திரா காந்தி வரை என காங்கிரஸ் தலைமையிலான ஒற்றை தேசிய கட்சியின் ஆட்சி நாட்டில் நடைபெற்றது. இடையில் குல்ஸாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, மீண்டும் குல்ஸாரி லால் நந்தா ஆகியோர் இந்திய பிரதமராக சிறிது காலம் ஆட்சியில் இருந்தார்கள்.
 
இந்திரா காந்திக்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியும் அவரைத் தொடர்ந்து செளத்ரி சரண் சிங் தலைமையிலும் ஜனதா கட்சி மதசார்பற்ற அணி தலைமையிலும் ஆட்சி நடைபெற்றது. பிறகு மீண்டும் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 1980 முதல் 1984-ஆம் ஆண்டு வரை ஆட்சி நடைபெற்றது.
 
இந்திராவின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ராஜீவ் காந்தி தலைமையில் 1984 முதல் 1989-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
 
இந்த காலகட்டத்தில், ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மூன்று ஆண்டுகள் கேபினட் அமைச்சராக இருந்த வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஷ்வநாத் பிரதாப் சிங், 1987-ஆம் ஆண்டு அமைச்சரவையில் இருந்து மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறினார். பிறகு அவர் சார்ந்த ஜனதா தளம் கட்சி, நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் எதிர்ப்பை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
 
எதிர்கட்சிகளின் அரசியலுக்கு வரவேற்பு
 
அந்த காலகட்டத்தில் 1989-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாக்கிய தேசிய முன்னணி, மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு உருப்பெற்றது.
 
இருப்பினும், மதங்கள், ஜாதிய விவகாரங்களில் வி.பி.சிங் அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் அதிருப்தியின் விளைவால், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் 1990-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியில் இருந்து வி.பி.சிங் விலகினார்.
 
இதன் பிறகு 1990-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்வரை சமாஜவாதி ஜனதா கட்சியை வழிநடத்திய மூத்த தலைவரான சந்திரசேகர் மத்தியில் ஆட்சி செலுத்தினார். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த அவரது கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால், சில மாதங்களிலேயே அந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டதால் சந்திரசேகர் அரசு கவிழ்ந்தது.
 
ஆந்திராவுக்கு வாய்ப்பு
 
இதைத்தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியைப் பிடித்தது. அதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.வி.நரசிம்மராவ் பிரதமராக பதவியேற்றார். அவரது பதவிக்காலத்தில் மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி பல்வேறு மாநிலங்களில் வளர்ந்தது.
 
ராவ் அரசு மீதான ஊழல் புகார்கள், 1993-ஆம் ஆண்டில் வாக்களிக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு போன்ற விவகாரங்களில் நீதிமன்ற விசாரணையை அவர் எதிர்கொண்டார். இதன் விளைவாக, ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராவ் விலகினார்.
 
1996-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு, முதல் முறையாக ஆட்சி அமைத்தது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதிமூன்று நாட்கள் மட்டுமே அவரது அரசு நீடித்தது.
 
அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் அல்லாத அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி கூட்டணி, தேவேகெளடா தலைமையில் ஆட்சி அமைக்க, அவரே எதிர்பார்க்காத வேளையில் வாய்ப்பு அமைத்துக் கொடுத்தது. ஆனால், அவரது தலைமையும் 1996-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல், 1997-ஆம் ஆண்டு, ஏப்ரல் 21-ஆம் தேதிவரை மட்டுமே ஆட்சி செலுத்தியது. அவரைத் தொடர்ந்து, அதே ஐக்கிய முன்னணி கூட்டணி தலைமையில் ஐ.கே. குஜ்ரால் என்றழைக்கப்பட்ட இந்தர் குமார் குஜ்ரால் தலைமையிலான அரசு, 1997, ஏப்ரல் 21 முதல் 1998, மார்ச் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது.
வாஜ்பேயி தலைமையின் பலவீனம்
 
இதன் பிறகு, 1998-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது. இதன் பிறகு, தமிழகத்தில் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி, 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை முழுமையாக ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தது.
 
பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர், நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பிந்தைய விளைவுகள், குஜராத் கலவரத்துக்கு பிந்தைய நடவடிக்கைகளில் மெத்தனம் போன்றவை, வாஜ்பாய் தலைமையிலான அரசின் பலம் மற்றும் பலவீனமாக கருதப்பட்டது.
 
இதன் பிறகு, 2004-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தமிழகத்தைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அமைத்த அரசு 2014-ஆம் ஆண்டு வரை இரு முறை பதவிக்காலங்களை நிறைவு செய்தது.
 
இதையடுத்து 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, அதன் கூட்டணி அரசும், அடுத்த சில மாதங்களில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது.
 
 இந்திய சுதந்திரத்துக்கு பிந்தைய 70 ஆண்டுகளின் பயணத்தில் இந்த வரலாறை அறிந்து கொண்டால் மட்டுமே, தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஏன் பிரதமராக வர முடியாமல் போனது என்பதை எளிதாக அறியலாம்.
 
அதிலும், இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமராக ஏன் வர முடியாமல் போனது என்பதை விட, அவர்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தும் அது சாத்தியமாகாமல் போனது ஏன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
 
காமராஜருக்கு அமைந்த வாய்ப்புகள்
 
இந்திய பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் மரணம் அடைந்த காலகட்டத்தில், உயரிய ஜனநாயகப் பொறுப்பான பிரதமர் பதவி, தமிழகத்தைச் சேர்ந்த கே. காமராஜுக்கு தாமாகத் தேடி வந்தது.
 
ஆனால், ஆச்சர்யமளிக்கும் வகையில், நேரு காலமானபோது, பிரதமர் பதவிக்கு தகுதியானவர் லால் பகதூர் சாஸ்திரி என அவரது பெயரை வலிய முன்மொழிந்தார் காமராஜ்.
இதேபோல லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தபோதும், அடுத்த பிரதமராக நேருவின் வாரிசான இந்திரா காந்தியே, காமராஜின் தேர்வாக இருந்தார். இது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, நோ ஹிந்தி, நோ இங்கிலீஷ், தென் கவு? (ஹிந்தி தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. பிறகு எப்படி?) என்று காமராஜ் எழுப்பிய மறுகேள்வி அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான வரிகளாக பேசப்பட்டன.
 
தனது செயல்பாடு மூலம் இரு முறை நாட்டின் பிரதமராக தாமாக வாய்ப்பும் சூழலும் அமைந்தபோதும், அதை புறந்தள்ளிவிட்டு, நாட்டின் தலைமையை தேர்வு செய்யும் மிகப்பெரிய பொறுப்புக்குரிய பக்குவமடைந்த தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் காமராஜ். அதுவே அவரை பலரும் கிங் மேக்கர் என்று அழைக்க காரணமாக அமைந்தது.
 
பின்னாளில், அவசரநிலை பிரகடனத்தின் விளைவால், இந்திரா காந்திக்கு எதிராக அரசியல் நடத்திய ஜெய்பிரகாஷ் நாராயண், அவசரநிலைக்கு பிந்தைய பொதுத்தேர்தலின்போது இந்திரா காந்தி நிச்சயம் தோற்கடிக்கப்படுவார் என நம்பினார். அதைத்தொடர்ந்து மத்தியில் அமையும் ஆட்சிக்கு தலைமை தாங்க காமராஜ் பெயரை முன்மொழியலாம் என்று அவர் விரும்பினாலும், 1975-இல் காமராஜ் காலமானதால், அந்த யோசனை செயலாக்கம் பெறவில்லை என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுண்டு.
 
அந்த வகையில், 1970-களிலேயே இரு முறை பிரதமராக, தேடி வந்த நேரடி வாய்ப்பை தமிழரான காமராஜ் ஏற்கவில்லை.
 
இரண்டாவது தமிழருக்கு வாய்ப்பு
 
தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய அளவில் வாக்கு வங்கியை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் மெல்ல மெல்ல பலவீனம் அடையத் தொடங்கியது.
 
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சிகளாக மட்டுமின்றி, மாநிலத்திலும் மத்திய ஆட்சிகளிலும் தவிர்க்க முடியாத கட்சிகளாக விளங்கின.
மும்பை தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை நினைவு கூரும் 'தாக்கரே' திரைப்படம்
 
போக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ - சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தொண்ணூறுகளில் நாட்டின் பிரதமராக யாரை தேர்வு செய்யலாம் என்ற யோசனை முன்னெடுக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை தோற்றுவித்த ஜி.கே. மூப்பனாரின் பெயரை பல கட்சிகளின் தலைவர்களும் பரிசீலித்தார்கள்ஆனால், அப்போது அந்த வாய்ப்பை தமிழகத்தில் முக்கிய கட்சியாக இருந்த திமுகவின் தலைமை விரும்பவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நம்பியதாக கூறப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.தேவேகெளடா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு அடிபட்டன. அதில் தேவேகெளடா சிறிது காலமும், அவரைத் தொடர்ந்து ஐ.கே. குஜ்ராலும் இந்திய பிரதமராக அடுத்தடுத்து பதவிக்கு வந்தார்கள்.
 
தமிழகத்தைப் போலவே அதன் அண்டை மாநிலமான கேரளத்திலும் பிரதமர் பதவிக்கு எவரும் முன்னிறுத்தப்பட்டதில்லை. அதே சமயம், இந்த இரு மாநிலங்களில் இருந்தும் நாட்டின் குடியரசு தலைவர் பதவிக்கு சில தலைவர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1962 - 67), ஆர். வெங்கட்ராமன் (1987 - 92), ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (2002-07), கேரளத்தில் இருந்து கே.ஆர். நாராயணன் 1997 - 2002) ஆகியோர் தேர்வாகியிருக்கிறார்கள்.
 
ஆனால், பிரதமராகும் அளவுக்கு தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் கூட தேர்வாகாமல் போனதற்கு இந்திய பூகோள நிலையும், அரசியல் சூழ்நிலைகளையும் முக்கிய காரணங்களாகக் குறிப்பிடலாம்.
 
இந்தியாவில் பொதுவான வட மாநில கட்டமைப்பை இணைப்பது அவற்றின் கலாசாரம், நதிகள் மட்டுமின்றி, மொழி வாரியான இடைவெளியையும் குறிப்பிடலாம். ஆந்திரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சில தலைவர்கள் ஆறுதல் அளிக்கும் வகையில் நாட்டின் பிரதமராகியிருந்தாலும், அந்த தலைவர்கள், வட மாநிலங்களில் உள்ள அரசியல் தலைமைகள், தங்களுக்குள்ளாக ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியாத நிலையில், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பிரதமராக்கினார்கள்.
 
அதற்கு காரணம், வட மாநிலங்களைச் சேர்ந்த தேசிய அளவிலான கட்சிகளின் தலைமைகள், தங்களுக்கு பாதகமில்லாத அல்லது மென்மையான அணுகுமுறையைக் கொண்ட தலைவர்களாக தென் மாநிலங்களைச்சேர்ந்த தலைவர்களைக் கருதுவதாக இருக்கலாம்.
 
அதே சமயம், அரசியல் சூழ்நிலைகள் மாறுபட்ட பிறகு, பிரதமர் பதவி வகித்த தென் மாநில தலைவரை, வட மாநிலங்களில் உள்ள அரசியல் தலைமைகள் மாற்றிக் கொண்டன, கடந்த எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றை படித்து உணர்ந்தல் தெளிவாகும்.
மோடியின் அரசியல் தந்திரம்
 
இந்திய அரசியல் வரலாறின் மற்றொரு திருப்பமாக, கடந்த 2014-ஆம் ஆண்டில் நடந்த மக்களவை பொதுத்தேர்தலின்போது கங்கை நதி ஓடும் மாநிலங்களுக்கு வெளியே உள்ள ஒருவராக குஜராத் பிரதமராக இருந்த நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் களமிறக்கப்பட்டார்.
 
அப்போதும் கூட அவர் தமது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியில் மட்டுமின்றி உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் வெற்றி உறுதியான பிறகு, தமது சொந்த மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியில் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு வாராணசி தொகுதி உறுப்பினராகவே அவர் நீடித்தார்.
 
அதற்கு காரணம், நாட்டின் பிரதமரானாலும், மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள தொகுதியில் உறுப்பினராக நீடிப்பதன் மூலம், அவர் தனக்கான இடத்தையும் அந்த மாநிலம் மட்டுமின்றி கங்கை நதி ஓடும் மாநிலங்களின் வாக்காளர்களின் நம்பிக்கையையும் பெறும் நோக்குடன் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதினாலும்.
 
வட மாநிலங்களில் இருந்து அன்னியப்படாமல் இருக்க மோடியின் வாராணசி தொகுதி உறுப்பினர் பதவி கைகொடுப்பதாகவும் அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது.
 
மேற்கு வங்கத்துக்கு ஏமாற்றம்
 
இந்திய அரசியல் வரலாறில் மற்றொரு திருப்பமாகவும், அரிதாக செயல்பாடாகவும் தீவிரஅரசியலில் நீடித்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி, கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்தது.
 
அதுநாள் வரை நாட்டின் பிரதமராகும் கனவை கண்டு வந்த பிரணாப் முகர்ஜி, தமது கடைசி ஆசை நிறைவேறாத நிலையில், "குடியரசு தலைவர் பதவியை வகித்து நீங்காத கனவுடன் அரசியல் பொதுவாழ்வை 2017-இல் நிறைவு செய்தேன்" என்று பிபிசி நிருபரிடம் தெரிவித்தார். அவருக்கு கிடைக்காத பிரதமர் பதவி வாய்ப்பு, மேற்கு வங்க மாநிலம் எதிர்கொண்ட ஏமாற்றமாகவும் பார்க்கப்பட்டது.
 
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய முன்னணி அமைந்த காலத்தில் நிலவிய சூழல் போல ஒரு அணி அமைந்து அதில் தமது கட்சி மாநிலத்தில் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியைக் கோரலாம் என்று கருதுவதாக அம்மாநில அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமாகுமா? அவரை நாட்டின் பிரதமராக மற்ற மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைமைகள் ஏற்குமா போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
 
ஜெயலலிதாவின் நிறைவேறாத கனவு
2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், 9 இடங்களில் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக வென்றபோது, தனக்கு பிரதமராகும் அளவுக்கு லட்சிமிகு ஆசை இல்லை என்று கூறினார்.
 
அதுவே, 2014-ஆம் ஆண்டில் அவரது கட்சி, தமிழகத்தில் 37 தொகுதிகளில் வென்றபோது, அவர் பிரதமராக வேண்டும் என்ற குரலை அவரது கட்சியினர் ஒலித்தார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளுடன் அணி சேராமல் தனித்து அஇஅதிமுக போட்டியிட்டபோது அவரை சிறந்த தேசிய தலைவர்களாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அங்கீகரித்து புகழாரம் சூட்டினார்கள்.
 
காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் பதவிக்காக தலைமை தேடுதலில் ஈடுபட்ட போதெல்லாம் இவரது பெயர் பரிசீலிக்கப்படுவதாக பேசப்பட்டது.
 
ஆனால், 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை என, தொடர்ந்து இரு முறை மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு பிரதமராக தேர்வு செய்த பிறகு, அந்த கட்சியில் காமராஜுக்கு பிறகு ஒரு தமிழருக்கு சாத்தியமாகக் கருதப்பட்ட வாய்ப்பு அறவே குறைந்தது.
 
வடகிழக்கு மாநிலத்துக்கு ஆறுதல்
 
ஆறுதல் தரும் வகையில், வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவரும் பஞ்சாப் (தற்போது பாகிஸ்தான்வசம் உள்ள பகுதி மாநிலத்தைச் சேர்ந்தவர்.
 
அடிப்படையில் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மூலாதாரமாகக் கொண்டு தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்படாமல் இருப்பதற்கு, தேசிய அரசியலில் நிலவும் சூழ்நிலைகள், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேசிய அரசியலில் தலைமை பதவிக்கு முன்னேறும் அளவுக்கு அமையாத வாய்ப்பு முக்கிய காரணங்களாகும்.
 
மொழி, இன, கலாசார வேறுபாடுகளால் ஒதுங்கியிருக்கும் அரசியல் நிலைமை மாறி, எப்போது உத்தர பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை போல தென் மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள், அதுவும் ஒரே கட்சி ஒட்டுமொத்த தொகுதிகளையும் கைப்பற்றி பலம் வாய்ந்ததாக மாறுகிறதோ, எப்போது மத்தியில் ஆட்சி அமைக்க கூட்டணி ஆட்சிக்கான களம் சாதகமாக அமைகிறதோ அந்த காலகட்டத்தில்தான் பிரதமர் பதவிக்கான உரிமையையும் குரலையும் சம்பந்தப்பட்ட கட்சிகளால் ஓங்கி ஒலிக்க வாய்ப்பு ஏற்படும்.
 
ஆனால் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளில், காமராஜுக்கும் மூப்பனாருக்கும் கிடைத்ததாக நம்பப்படும் அரசியல் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும், இனி தென் மாநிலங்களில் உள்ள கட்சிக்கோ மாநிலத்துக்கோ அமையுமா என்றால், அது சந்தேகம் என்றே கூற முடியும்.