பாதுகாப்பு பயிற்சியின்போது கிராமம் அருகே ஏவுகணை: ராஜஸ்தானில் பரபரப்பு..!
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் துப்பாக்கி சூடு தளத்தில் நடைபெற்ற வழக்கமான பாதுகாப்பு பயிற்சியின்போது, ஏவப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி இலக்கை விட்டு விலகி, வெளியே உள்ள கிராமம் ஒன்றின் அருகே விழுந்தது.
ஏவுகணையின் ஒரு பகுதி, ஜெய்சல்மரின் லத்தி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பதரியா கிராமத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் விழுந்தது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதால், அருகிலுள்ள கிராம மக்களிடையே பெரும் பீதி நிலவியது.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது சொத்துகளுக்கு சேதமோ ஏற்படவில்லை. விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், ராணுவம், விமானப்படை மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்தை உடனடியாக சுற்றி வளைத்தனர். ஏவுகணையின் பகுதி மீட்கப்பட்டு, மீண்டும் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ராணுவ பயிற்சிகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கவனம் தேவை என்று இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது.
Edited by Mahendran