வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 8 ஜூன் 2024 (14:42 IST)

நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்..! மல்லிகார்ஜுன் கார்கே..!!

Congress
நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில்  மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
தேர்தல் முடிவுகள் குறித்தும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே,    பாஜகவின் 10 ஆண்டுகால பிரிவினை, வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.
 
Congress Meeting
இந்திய ஒற்றுமை யாத்திரை மற்றும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும் இடங்களும் அதிகரித்துள்ளன என்றும் நியாய யாத்திரை தொடங்கிய மணிப்பூரில் இரு இடங்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றும்  தெரிவித்தார்.
 
நாகாலாந்து, அசாம், மேகாலயா போன்ற பல வடகிழக்கு மாநிலங்களிலும் நமக்கு இடங்கள் கிடைத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக மகாராஷ்டிராவில் நாம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளோம் என்றும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
 
இது மட்டுமின்றி, எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இந்த தருணத்தில், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன் எனவும் அவர் கூறினார்.

 
மேலும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயல்படுவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.