காஷ்மீர் அந்தஸ்து நீக்க நாள்; பாஜக பிரமுகரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்!
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இந்தியாவுடன் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்பதால் பலத்த ராணுவப்பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆபத்தான பகுதிகளில் 144 தடை உத்தரவு பாதுகாப்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் சஜாத் அகமது எதேச்சையாக வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் சஜாத்தை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஜாத் அகமது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பாஜக பிரமுகர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சஜாத் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.