1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (17:55 IST)

இன்னும் 28 நாட்களுக்கு நீளும் ஊரடங்கு... மோடியின் அடுத்த அறிவிப்பு இதுதானா??

மேலும் 28 நாட்களுக்கு ஊரடங்களை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கடந்த ஒரு சில நாட்களில் மிக வேகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.  
 
குறிப்பாக டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் தான் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4314 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
இந்நிலையில், நிலைமை மோசமாக இருப்பதால் நாடு முழுவதும் மேலும் 28 நாட்களுக்கு ஊரடங்களை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்தி ஒன்று உலா வர துவக்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க அதிக வாய்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதற்கு முன்னர் அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி - செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீக்கப்படலாம் என தகவல் வெளியிட்டது.  
 
மேலும், இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என முன்னரே அறிவித்திருந்தது என்பது கூடுதல் தகவல்.