ரூ.3.47 கோடி அமெரிக்க டாலர்களை மாணவிகள் கடத்தினார்களா? 2 பேர் கைது..!
புனேவில் இருந்து துபாய் சென்ற மாணவிகளிடம் 3.47 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதையடுத்து, அந்த மாணவிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 15ஆம் தேதி, புனேயில் இருந்து 3 மாணவிகள் துபாய்க்கு பயணம் செய்தனர். அந்த மாணவிகள் சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை கடத்திச் செல்கிறார்கள் என சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, மாணவிகளை சோதனை செய்தபோது, அவர்களது நோட்டு புத்தகங்களுக்குள் 3.47 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாய் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், அந்த மூன்று மாணவிகளையும் திருப்பி புனேவுக்கு அனுப்பக் கோரினர்.
இந்த அடிப்படையில், மூன்று மாணவிகளும் மீண்டும் புனே திரும்பிய பிறகு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, "அந்த பையில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. குஷ்பூ அகர்வால் என்பவரே எங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். கடைசி நேரத்தில், அவர் இந்த பேக்கை கொடுத்து, 'துபாயில் ஒருவர் வருவார், அவரிடம் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்" என அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அவரது மீது வைத்த நம்பிக்கையின் அடிப்படையில், மாணவிகள் அந்த பேக்கை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, மாணவிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குஷ்பு அகர்வால் கைது செய்யப்பட்டார்.
அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில், முகமது அமீர் என்பவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
Edited by Siva