சல்மான் குர்ஷித் விவகாரம்: கட்சியினருக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்

புதுடெல்லி| Webdunia|
தேர்தல் பிரசாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு பேசுமாறு தமது கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய சல்மான் குர்ஷித், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தால், முஸ்லிம்களுக்கு 9 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இது குறித்து சர்ச்சை எழுந்தபோதிலும், அவர் தான் பேசியதில் தவறில்லை என்று கூறிவந்தார்.காங்கிரஸ் கட்சியும் அவர் பேசியதை நியாயப்படுத்தி இருந்தது.தேர்தல் வாக்குறுதி பற்றி பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளதாக அக்கட்சி கூறியிருந்தார்.
இந்நிலையில்,அமைச்சர் சல்மான் குர்ஷித் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசி வருவது குறித்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலுக்கு,தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

இதுஒருபுறமிருக்க சல்மான் குர்ஷித்தை பதவி நீக்கம் செய்யவேண்டும் என பா.ஜனதா கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில் பிரச்னை தீவிரமடைந்ததை தொடர்ந்து,தேர்தல் பிரசாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு பேசுமாறு தமது கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இன்று அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்,ஊடக பேச்சாளருமான ஜனார்தன் திரிவேதி," தேர்தல் ஆணையம் என்பது ஒரு அரசியல் சாசன அமைப்பு.எனவே காங்கிரஸ் கட்சி தனது தலைவர்கள் பொது வாழ்வுக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டும், சட்டத்திற்கு உட்பட்டும் நடந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறது" என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :