வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 30 ஜனவரி 2016 (13:42 IST)

அரண்மனை 2 - விமர்சனம்

பக்கத்து மாநிலங்களில் விதவிதமாக பரிமாறினால் தான் ரசிகர்களுக்கு பசி அடங்குகிறது. தமிழன் பழைய சாதத்தை பிசைந்து போட்டாலும் சப்பு கொட்டுகிற ரகம். அவன் வீக்னஸை அறிந்து சுந்தர் சி. படைத்திருக்கும் படையல்தான் இந்த அரண்மனை 2.


 
 
ஜமீன்தார் ராதாரவியையும், அவரது இரு மகன்களையும் குறி வைத்து தாக்குகிறது ஒரு பேய். அவர்களின் அரண்மனைக்குள்ளேயே அன்வான்டடாக குடியிருக்கும் அந்த பேயால் கோமாவில் விழுகிறார் ராதாரவி. மூத்த மகன் சுப்பு பஞ்சுவின் உயிர் பறி போகிறது. இளைய மகன் சித்தார்த்தின் ரத்தத்தை குடிக்க துடிக்கிறது  அந்த பொல்லாத பேய். பேய்க்கு ஏன் இந்த குடும்பத்தின் மீது தீராப்பகை...? இடையில் என்ட்ரி கொடுக்கும் சுந்தர் சி. இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதுடன், பேய்க்கும் முடிவுகட்டுகிறார்.
 
வெள்ளைச் சேலை, கொஞ்சம் பவுடர், தக்காளி சாஸ், சவுரிமுடியுடன் கொஞ்சம் கிராபிக்ஸும் கலந்தால் ஒரு பேய் படம் தயார். கதை? நல்லவனாக இருப்பவனை கெட்டவர்கள் கொலை செய்ய, செத்துப் போன நல்லவனின் ஆவி கெட்டவர்களை பழிவாங்கும். இல்லையென்றால் வைஸ் வெர்சா. கெட்டவன் செத்து ஆவி வடிவில் பழிவாங்க அலைவான். அரண்மனை 2 முதல் ரகம். சுந்தர் சி. இந்தளவுக்குகூட யோசிக்கவில்லை. அரண்மனை படத்தின் கதையை அப்படியே எடுத்திருக்கிறார். அரண்மனையை பார்த்த அதே ஆடியன்ஸ் இந்தப் படத்தையும் ரசிப்பதுதான் சுந்தர் சி.யின் காமெடி மேஜிக்.
 
பேயிடம் பேய்த்தனமாக அடிவாங்கும் ராதாரவியைப் பார்த்து உச்சு கொட்டும் அதே மனசு, "பாசமா வளர்த்துட்டேன், உன்னை அடிச்சுக் கொல்ல மனசு வரலை, நீயே இந்த விஷத்தை குடிச்சிடுமா" என்று சாதி வெறியை சாந்தத்தோடு வெளிப்படுத்தும் போது பதறிப் போகிறது. ராத்திரி நேரங்களில் அரண்மனையில் இருப்பவர்களோடு நம்மையும் கலங்கடிக்கும் அந்த அகோரப் பேய் அழகு ஹன்சிகா என்பது இடைவேளையின் அதிர்ச்சி திருப்பம். ஆனால், அதனை தக்க வைத்துக் கொள்கிற கதையோ, திரைக்கதையோ படத்தில் இல்லை. கிளைமாக்ஸில் பேய் த்ரிஷாவிடம் குடியேறிய பிறகு ஒரே சிரிப்பு மழை. த்ரிஷா பேயாக முறைத்தாலும் பயம் வருவதில்லை என்பது இன்னொரு பரிதாபம்.
 
த்ரிஷாவுடன் ஒரு டூயட் பாடிவிட்டு, படம் நெடுக கன்னத்தில் கை வைக்கும் கதாபாத்திரம் சித்தார்த்துக்கு. இந்த கிளிஷேக்கள் அனைத்தையும் மறக்க வைப்பது, வைத்தியராக அரண்மனைக்குள் என்ட்ரியாகும் சூரியும், அவரது அப்பாவின் பழைய 'லவ்' கோவை சரளாவும். முன்னாள் காதலனின் மகனை காதலனாக நினைத்து அவர் காட்டும் ரொமான்ஸ் அளும்பும், அதில் தளும்பும் சிரிப்பும்தான் படத்தின் ஹைலைட். "பேயைப் பார்த்தா ஒண்ணுக்கு போவாங்க, நீ பேயை கூட்டிட்டு ஒண்ணுக்கு போயிருக்க" என்று சூரி கோவை சரளாவை கலாய்க்கையில் தியேட்டர் அதிர்கிறது. ராய் லட்சுமி இல்லாத குறையை தீர்க்கிறார் பூனம் பஜ்வா.
 
அரண்மனைக்குள் பேய், நாய் மாதிரி எங்கும் அலைந்து திரிய, யாரும் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாததும், சுப்பு பஞ்சுவை பேய் அடித்து தூக்கி செல்வதைப் பார்த்தும் சுந்த சி. அண்ட் கோ சும்மாயிருப்பதும், சுப்பு பஞ்சுவின் மனைவி, அவரை தேட வேண்டாம், வப்பாட்டி வீட்டுக்கு போயிருப்பார் எனறு, ஏதோ குளத்துக்கு குளிக்கப் போயிருப்பார் என்பது போல் கூலாக சொல்வதும் திரைக்கதையின் மெகா சைஸ் பொத்தல்கள். இதேபோல் படம் நெடுக ஓட்டைகள் தாராளம்.
 
பேயை பார்த்து பயப்படுகிறோமோ இல்லையோ, ஹிப் ஹாப் ஆதியின் இசையில் திகிலாகிறோம். இப்படியா காதை செவிடாக்குவது. பாடல்களும் அப்படியே. மெகா சைஸ் அம்மனுக்கு முன்னால் அதே சைஸில் குஷ்பு ஆடும் கிளைமாக்ஸ் உண்மையிலேயே ஒரு வன்கொடுமை.
 
காமெடியும், கொஞ்சம் சஸ்பென்ஸும் இருந்தால் எதையும் தலையில் கட்டலாம் என்ற சுந்தர் சி.யின் கால்குலேஷன் இந்தமுறையும் அவருக்கு கரன்சியை கொட்டப் போகிறது. 
 
இதை சுந்தர் சி.யின் வெற்றி என்பதைவிட ரசிகர்களின் தோல்வி எனலாம்.