வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2019 (22:38 IST)

”ஆறடி” திரைப்படம்: திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எளிய மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பது போல பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக எளிய மக்களின் காதலை மிகவும் சுவாரசியமாகவும் ரசிக்கும்படியும் வெளியான திரைப்படங்கள் கணக்கில் அடங்காதவை. அந்த வரிசையில் நிச்சயமாக “ஆறடி” திரைப்படம் இடம்பெறும்.

வெட்டியான் வேலையை குலத்தொழிலாக கொண்டுள்ள குடும்பத்தின் பாரத்தை ஒரு இளம்பெண் சுமக்கின்ற சூழலுக்கு அந்த குடும்பம் தள்ளப்படுகிறது. ஒரு விபத்தில் தம்பியை இழந்து, அதே விபத்தில் தன் தந்தைக்கு ஒரு கை இயங்காமல் போக, தன் தங்கையையும் அனாதையாக விட்டுவிடக் கூடாது என்பதற்காக, மம்பட்டியை கையில் எடுக்கிறார் கதாநாயகி. பெண்கள் வெட்டியான் வேலை பார்ப்பதை அந்நியமாக பார்க்கும் சமூகத்தை பொருட்படுத்தாமல், தன் குடும்பத்திற்காக தியாகம் செய்யும் ஒரு மன தைரியம் உள்ள இளம்பெண்ணாக ”தாமரை” கதாப்பாத்திரம் மலர்கிறது.

எளிய குடும்ப பெண்ணுக்கு, அதுவும் குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்ணுக்கு காதல் வரக்கூடாதா என்ன? வரலாம். ஆனால் தகுதியை மீறி காதல் வரலாமா? இந்த கேள்விகளுக்குள்ளே தாமரை அடங்கிப்போகிறாள். தன்னை தானே அந்த கேள்விகளால் குத்தி காயப்படுத்தி கொள்கிறாள். தாமரைக்கு தன்னுடைய தகுதிக்கு மீறிய ஒரு ஆணுடன் காதல் வருகிறது. காதல் மலர்ந்த தருணத்தில் அந்த கேள்விகளுக்கு விடைகளை தேடிக் கொண்டிருக்கும் தாமரை, ஒரு கட்டத்தில் தன்னுடைய காதல் ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆனால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு ஆண், வெட்டியான் தொழில் செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதை இந்த சமூகம் ஏற்றுகொள்ளுமா? தாமரை இந்த கேள்விக்கும் பதில் தேட வேண்டியவளாய் போகிறாள்.

தனது மகள் அவளுடைய காதலரை கரம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாப்பிள்ளை வீட்டார் கேட்ட லட்ச ரூபாய் வரதட்சனையை சேர்ப்பதற்கு, தன்னுடைய ஒற்றைக் கையையும் பொருட்படுத்தாது மம்பட்டியை தூக்கும் தந்தையை பார்த்து நெகிழ்ச்சியில் அழுகிறார் தாமரை. தாமரைக்கு மட்டுமல்ல, படம் பார்த்த ரசிகர்களுக்கும் கண்கள் வேர்க்கின்றன. இந்த தடைகளை எல்லாம் தாண்டி தனது காதலரை, தாமரை கரம் பிடித்தாரா இல்லையா என்பது தான் இந்த ‘ஆறடி” குடும்பத்தின் உச்சக்கட்டம்.

தான் கூறிய வாக்கிலிருந்து என்றும் தவறாத ஒரு தைரியப் பெண்ணாக தாமரை என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை தீபிகா ரங்கராஜூ வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய தங்கையின் மீதும், தந்தையின் மீதும் கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும்போது, ஒரு சராசரி பெண்ணின் அன்பு பிணைப்பை வெளிப்படுத்தும் போதும் தீபிகா மிளிர்கிறார். அவருக்கு காதலராக நடித்த விஜயராஜ், காதல் காட்சிகளில் ரசனை மிகுந்த நடிப்பில் ஜொளிக்கிறார்.

கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ள சாப்ளின் பாபு, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.
அறிமுக இசையமைப்பளரான அபேஜோஜோவின் பிண்ணனி இசை திரைப்படத்தின் காட்சிகளை இசையாக கோர்த்தது போல அமைத்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து பாடல்களின் வரிகளும் காட்சியின் உயிரோட்டத்தை பிரதிபலிப்பது போல அமைந்துள்ளது. திரைக்கதையை விட்டு விலகாத பாடல்களை மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் இசையமைத்துள்ளார் அபேஜோஜோ. ஆர்.கே.விஜயனின் ஒளிப்பதிவு மிகவும் கச்சிதமாகவும், திரைப்படத்தின் உயிரோட்டமாகவும் அமைந்துள்ளது.

இதுவரை யாரும் தொடாத ஒரு களத்தை தொட்டு, திரைக்கதையிலும் சுவாரசியத்தை இழக்காமல் கொண்டு சென்றுள்ளார், இந்த திரைப்படத்தின் இயக்குனரும் படத்தொகுப்பாளருமான சந்தோஷ். மொத்ததில் ஜனரஞ்சக ரசிகர்கள் ரசிக்கும்படியாக, ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாக வைத்து யதார்த்த சினிமாவை வழங்கியுள்ள “ஆறடி’ திரைப்படக் குழுவின் முயற்சிக்கு பாராட்டுகளை தாராளமாக வழங்கலாம்.

”ஆறடி” திரைப்படத்திற்கு Webdunia தமிழ் 5 க்கு 4 மதிப்பெண்களை வழங்குகிறது.