உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்

Webdunia|
புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
ருக்மணிக்காக...
அந்த பாமா ருக்மணி இருவருமே அவன்
ஒருவனுக்காக..

இது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒருவனை நினைத்து முன்னாள் காதலியும், இன்னாள் மனைவியுமான இரண்டு பெண்கள் பாடும் பாடல்.

இந்த பாடலைப் போன்று சோகமான ஒரு சம்பவம் சோகமே உருவாக இருக்கும் வன்னிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் நடந்து வரும் போரில், சிறிலங்கப் படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இன்னுயிரை நீத்த வீரரின் உடலுக்கு அவரது இரண்டு மனைவிகள் கண்ணீர் போராட்டம் நடத்தினர்.

அதாவது, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இராணவ வீரர் வன்னிப் போர் முனையில் போர் புரிந்து உயிர் நீத்தார்.

அவர் இரண்டு பெண்களை திருமணம் முடித்துள்ளார். ஆனால் அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பது அந்த இரண்டு மனைவிகளுக்கோ அல்லது மற்ற உறவினர்கள் எவருக்குமோத் தெரியாது.
முதல் மனைவிக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு 8 வயதில் ஒரு பிள்ளையும் உள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்த வீரரின் உடல் 2வது மனைவியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டதுடன், அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதற்கிடையே, தனது கணவர் போர் முனையில் இறந்ததும், அவரது உடல் வேறொருவர் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதையும் அறிந்த முதல் மனைவி, தனது இரு பிள்ளைகளுடனும், கல்யாணப் புகைப்படங்களுடனும், திருமணப் பதிவு சான்றுடனும் 2வது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது நிலையை விளக்கி தனது கணவரின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறுக் கூறியதும்தான் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இரண்டு மனைவிகளின் ஒப்புதலுடன், 2வது மனைவியின் வீட்டில் இரண்டு நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் முதல் மனைவியின் வீட்டுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.


இதில் மேலும் படிக்கவும் :