வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (16:36 IST)

நவராத்திரியின் போது கொலு வைப்பதன் தாத்பரியம் என்ன தெரியுமா...?

நவராத்திரியின் சிறப்பே பலவிதமான, மண்ணாலான பொம்மைகளை வைத்து கொலு வைப்பது தான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவோ வைக்கலாம்.


முதலில் விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை கொலுப்படியில் வைத்த பிறகு தான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.

முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.
இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.
மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.
நான்காவது படியில் - நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.
ஐந்தாம் படியில் - ஐந்து அறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.
ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.
ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.
எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.
ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.

இதில், சரஸ்வதிக்கும் - லட்சுமிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்குமாறு வைக்க வேண்டும். புல்லாய், புழுவாய் பிறந்து, மனிதனாகப் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற உண்மையை உணர்த்தவே, நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

கொலு வைத்து அம்மனை வழிபடும் பெண்கள் அக்கம் பக்கத்தவர்களையும், உறவினர்களையும் அழைத்து பஜனைகள் பாடி, தாம்பூலப்பையை கொடுத்து, சுண்டல், பொங்கல் என அம்மனுக்கு படைத்த பிரசாதங்களை கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைப்பார்கள். இதன்மூலம் கொலு வைப்பவர்களுக்கும், கொலுவை பார்வையிட வந்தவர்களுக்கும் அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.