வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:26 IST)

பிரதோஷத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன??

பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
இறைவன் நமது பாவத்தை எல்லாம்  மன்னித்து அருள் தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும்.
 
வெள்ளிக்கிழமை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இன்று மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன்  தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி.
 
பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படுவது. பிரதோஷ வேளையின் மஹிமையை அறிந்தவர்கள் சிவனின் அளவில்லா கருணைக்கு பாத்திரமாக இந்த வேளையில் விரதமிருந்து, சிவனுக்கு பூஜை செய்கிறார்கள்.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன்  வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
 
இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல  நன்மைகளும் கிடைக்கும். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும்,  அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.