1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2020 ஒரு கண்ணோட்டம்
Written By சினோஜ்
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (22:54 IST)

2020 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்: சினிமா நட்சத்திரங்களின் அரசியல் மையம்!

கனவுத்தொழிற்சாலையாக இருந்தாலும் பல நட்சத்திரங்களை இவ்வுலகுக்குக் கொடுத்த பெருமை சினிமாவையே சேரும். சத்யஜித் ரே சினிமா முதல் இன்றைய காலக்கட்ட சினிமாக்கள் வரை திரைக்காட்சிகள் ஒவ்வொன்றும் மக்களின் மனதில் நீங்காவிடத்தைப் பெற்றுள்ளது. 

தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் அரசியல்களத்தில் ஈடுபடவில்லை என்றாலும் அவருக்குப் பின் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நடிப்புவேல் எம்.ஆர்.ராதா, எம்ஜிஆர், கண்ணதாசன், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், போன்ற முதல்தலைமுறை நட்சத்திரங்களுக்குப் பின், அன்றைய இளைஞர்களின் கனவுநாயகர்களாகவும் இளம்பெண்களின் கனவுக்கண்ணன்களாகவும் வலம்வந்த ரஜினி (புதிதாகத் தொடங்கவுள்ள கட்சி) கமல்( மக்கள் நீதி மய்யம்) , போன்றோர் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, இன்றைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அதேபோல் இவர்களுக்கு முன்னமே அரசியல் கட்சியைத் துவங்கிப் பெரும் சறுக்கலைச்சந்தித்த டி.ராஜேந்தர்( லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்) , கார்த்திக் -ன்( ஃபார்வர்ட் பிளாக் கட்சி), பாக்யராஜ் போன்றோரின் முயற்சிகள் இன்னும் தொடர்ந்தவண்ணமிருந்தாலும்கூட அவர்கள் முன்னேற்றம் சினிமாவைத்தவிர இந்த அரசியலில் இன்றும் ஏற்றத்தைச் சந்திக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. ஆனால் அவர்களின் முயற்சிகள் இன்னும் தொடர்வது என்பது பாராட்டத்தக்கது. அந்தவகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்னும் தங்களுக்கான இடத்தைப் பெறவும் தேர்தலில் ஓட்டுகளைப் பெறவும் திணறிக்கொண்டுள்ளது கண்கூடாகவே பார்க்கமுடிகிறது. அப்படியென்றால் எம்.ஜி,ஆர், சிவாஜி, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற சினிமா நட்சத்திரங்களின் அரசியல் வெற்றி அவர்களோடு போய்விட்டதா என்ற கேளவியும் எழுகிறது. இந்த வெற்றிடத்தை சினிமா நட்சத்திரங்களைத்தாண்டி தமிழக மக்கள் அடுத்த தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்கப்போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். காரணம் கருணாநிதி, ஜெயலலிதா இருபெரும் தலைவர்கள் இல்லாமல் தமிழகத் தேர்தல் களம் நடைபெறவுள்ளது.

இதற்கடுத்த தலைமுறையாகப் பார்க்கப்படும் இன்றைய சினிமாஸ்டார்கள் விஜய், முக்குளத்தோர் புலிப்படை) விஷால், உதயநிதி போன்றோர்  அரசியலில் கால்பதிக்க எண்ணிக்கொண்டுள்ளனர்.

ஆனால் இவர்களின் அரசியல் எந்தளவு மக்களிடம் எடுபடும் என்பதை இனி இவர்கள் தேர்தலில் போட்டியிடும்போதுதான் தெரியும்.

சினிமா நட்சத்திரங்களின் பிம்பம் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாகவே பார்க்கப்பட்டாலும், 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் வைகைப்புயல் வடிவேலுவின் தேர்தல் பிரசாரம் திமுகவிற்குப் பயன்படவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அதன்பிறகு வடிவேலுவின் சினிமா வாழ்க்கை பெருமளவு வாய்ப்புகள் இல்லாமல் பஞ்சாயத்துகளிலும் விமர்சனங்களிலும் போய்கொண்டுள்ளது அவரது ரசிகர்களுக்குப் பெரும் இழப்புதான்.

அடுத்து கருணாஸ், ஒரு காமெடி நடிகரான தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும் இசையமைபாளர், தயாரிப்பாளர், என்பதைத்தாண்டி, தற்போது எம்.எல்.ஏ.வாக அவர்  உள்ளார். இவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் அடுத்தத் தேர்தலில் இன்னும் தெளிவாகத் தெரிந்துவிடும்.

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள் சினிமா டயலாக்குகள் என எல்லாம் அவரது ரசிகர்களுக்கு ஆயிரம்வாலா பட்டாசுகளாகவிருப்பினும் அவர் தனது தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியின் இணையச் சம்மதம் தெரிவிக்காமல் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளது அவருக்கு அரசியலில் ஈடுபாடில்லையோ எனவும் சந்தேக எழத்தோன்றுகிறது. அவரது தாய் ஷோபாவின் கூற்றும் இதையே நம்பச் செய்கிறது. இப்போதைக்கு அரசியலில் நல்ல டாப்மார்கெட்டில் கோலோட்சும் விஜய், தனது சீனியர் நடிகர்களுள் சூப்பர் ஸ்டார்களுமான கமல்,ரஜினி ஆகியோரின்  அரசியல்வருகையை நன்கு உற்றுப்பார்த்து, அவதானித்துத்தான் அவரது அரசியல் முடிவு இப்போதல்ல இன்னும் சில பத்தாண்டுகளுக்குப் பின் நிகழ வாய்ப்புண்டு எனப் பலரும் கருதுகிறார்கள்.

நடிகர் கமலின் உறுதியான அரசியல் முடிவு ஊழலில்லாத ஆட்சியை நிர்வாகத்தை ஏற்பத்த மக்கள் நீதி மய்யமே சிறந்த தீர்வாக இருக்கும் என்று பரப்புரையில் பேசிவரும் கமல்ஹாசனின்  அடுத்தடுத்த முன்னெடுப்புகளிலும் சரி அவரது பரப்புரையில் கூடுகின்ற கூட்டத்திலும் ஒரு சினிமாக்காரர் என்ற பிம்பத்தைத்தாண்டிய ஒரு பிணைப்பு மக்களிடம் ஏற்படுகிறது. அவரை அரசியல்வாதி என்ற பிம்பத்திற்குள் மக்கள் தமது மனதில் நிறுத்தியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை; எல்லா நட்சத்திரங்கள் பேசும்போதும் இத்தகையகூட்டம் கூடுவது என்பது இயல்புதான். அது அவருக்கான நேர்மறையாக ஓட்டுகளாக மாறுமா என்பது வரப்போகிற கருத்துக்கணிப்புகளிலும் தேர்தல் முடிவுகளிலுமே பளிச்சிடும். ஆனால் இத்தேர்தலில் வெற்றிப்பெற அவரது முந்தைய ஒரு மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியும் சிறிது உற்சாகத்தைத் தந்துள்ளது என்றே கருதத்தோன்றுகிறது.

அவரது முன்னெடுப்புகள் ஆளும்கட்சியைக் குற்றம்சாட்டுவதாக இல்லாமல் நிகழ்காலத்தேவைகளையும் மக்கள் எழுச்சியை மையப்படுத்தியதாகக்கொண்டால் கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மக்களின் மகாநம்பிக்கையைப் பெற்று ஆட்சி அமைத்ததுபோல் இத்திராவிட அரசியல்களத்தில் பெரும் மாற்றம் ஏற்படவழியுண்டு. ஆனால் அதற்கு அவர் மற்றும் அவரது மக்கள் நீதி மய்ய நிர்வாகத்தினரின் உழைப்பு கமல் ரசிகர் மன்றத்தைபோல் கடைக்கோடி கிராமத்தினரின் அடிமனதில் ஊடுருவுவது உசிதம்.

ரஜினிகாந்தி மாஸ் இமேஜ் இன்றைய இளம்பிராயத்தினரிம் எடுபட்டாலும்கூட அவரது ஆன்மீக அரசியல் எந்தளவு மக்களின் எடுபடும் என்பது அவரது அரசியல்கொள்கை, உறுதிப்பாடு என அவர் எடுக்கும் ஒவ்வொருமுடிவிலும் பளிச்சிடப்போகிறது. ரஜினியின் சினிமா இமேஜ் மற்றும் அவரது ரஜினி ரசிகர் மன்றத்தினரிடம் ஆதர்சனம் அவருக்குப் பெரும் நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது எப்படியும்  அடுத்த வருடம் ஆட்சி நமக்குத்தான் என்று. இதில் எதிர்மறை விமர்சனங்கள் அவருக்கு எதிராக விழுந்தாலும் கால்நூற்றாண்டுகளுக்குப் பிறகு  அவர் இப்போதாவது ஒரு இறுதிமுடிவு எடுத்துள்ளது அவரது ரசிகர்களுக்கான பெரும் ஆறுதல். அத்துடன் ரஜினி- கமல் இருவரின் அரசியல் கட்சிகளும் மக்கள் நலனுக்கான கூட்டணி அமைத்தாலும் அது புது அரசியல்புயலாக மாறி இங்கு வேரூன்றிய திராவிட கட்சிகளுக்குப் பெரும் சாவலாக அமையும்; குறைந்தப்பட்சம் ஓட்டுகளைச் சிதறடித்துவிடமும் வாய்ப்புகள் அதிகம்.

நாம் தமிழர் மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பேச்சுத்திறமை அனைவரும் அறிந்ததே. அவரது தம்பிகளும் ஓயாது உழைத்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கான ஓட்டுகள் அடுத்தமுறையாவது  அவர்களின் எண்ணப்படி விழுமா என்பது அவர்களின் இத்தனை ஆண்டுகால அரசியல் பயணத்திற்கான மதிப்பீடாக இருக்கும்.

ஆனால் இத்தனை நடிகர்களின் கட்சிகளும் எம்.ஜி.ஆரின் ஆட்சியைத் தருவோம் என்று கூறுவதையே வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். எம்ஜிஆர் அமரராகி சுமார் இருபதாண்டுகளைக் கடந்தும்  எம்.ஜி.ஆரின் ஆளுமை என்பது இதிலிருந்தே தெரிகிறது. மக்களுக்குத் தெரியும் யாரை எங்கே வைப்பது என்று. அதனால் யார் என்ன வாக்குறுதிகளைக் கொடுத்துப் போட்டியிட்டாலும் யாரைச் சிம்மாசனத்தில் அமரவைப்பது என்று வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் மக்களின் எண்ணம் பளிச்சிடும்.

இந்த ஸ்டார்களின் அரசியல் நுழைவி்ற்கு, திராவிடக் கட்சிகள் என்ன பதில் சொல்லப்போகிறது, இதை எப்படி எடுத்தாள்கிறது என்பதை நாம்  நாள்தோறும் செய்தித்தாள்களிலும் செய்திகளிலும் பார்த்தாலும் அவதூறூகளும், பழிவாங்குதலும், அரசியல் காழ்ப்புணர்சிகளும், வெறுப்பு அரசியலும் இனிவருங்காலத்திலாவது குறைந்தால் நல்லது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
 
சினோஜ்