ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், முதல் படத்திற்குப் பிறகு வெற்றியை ருசிக்காத ரவி கிருஷ்ணா, தமிழ் ரசிகர்கள் மறந்துபோன கமாலினி முகர்ஜி. பிரபலமில்லாத இந்த நால்வர் இணைந்து பார்க்கிற மாதிரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின் குருட்டு அதிர்ஷ்டம். உலகமே நான்தான் என்று நினைக்கும் காதலன். உலகத்திற்காகத்தான் நான் என்று வாழும் காதலி. குணங்கள் எதிரெதிர் திசையில் இருப்பது தெரிந்ததும் காதலனை விட்டுப் பிரிந்து செல்கிறார் காதலி. பிரிவின் வலி உணரும் காதலன் அவளைத் தேடி புறப்படுகிறான். அந்த நெடும் பயணம், நான் என்ற அவனது அகந்தையை நாம் என்ற சிந்தையாக மாற்றுகிறது. அகந்தை களைந்த அவன் காதலியை கண்டுபிடித்தானா? காதலி அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாளா? உல்லாச பயணத்தின் உற்சாகத்துடன் பதில் சொல்கிறது, படம்.