புராணத்தை, நிகழ்காலத்துடன் இணைத்து இயக்குனர் ராஜு ஈஸ்வரன் பிழிந்திருக்கும் நகைச்சுவை சாறு, பஞ்சாமிர்தம். ராமாயண காலத்திலிருந்து தொடங்குகிறது படம். மாரிசனுக்கும், இடும்பனுக்கும் குருவின் மகள் மந்தாகினியின் மீது மோகம். மந்தாகினி யாருக்கு என்ற சண்டையில் இடும்பனை தண்டையாக்கி காலில் அணிந்து கொள்கிறான் மாரிசன். பிறகு மாய மானாக ராமனுக்கு போக்கு காட்டி அவனது அம்பால் வீழ்த்தப்பட்டு பூமியில் பாறையாக மாரிசன் மாறுவதுடன் புராண கதை நிறைவடைகிறது. நிகழ்கால கதை ஊட்டியில் நடக்கிறது. பணக்காரரான நாசரின் உதவியாளர் சரண்யா மோகன். அவரது கெடுபிடி பிடிக்காமல் நாசரை சுற்றியுள்ளவர்கள் மலையிலிருந்து சரண்யா மோகனை கிழே தள்ளிவிடுகிறார்கள். சரண்யா மோகன் விழும் இடம் மாரிசன் பாறை. சரண்யாவால் சாபவிமோசனம் பெறும் மாரிசன், அவருக்கு உதவ முன்வருகிறார்.