நடிகரான கவிஞர் பா. விஜய்
|
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மக்சீம் கார்க்கி எழுதிய நாவல்தான் தாய். அதையே கலைஞர் தாய் காவியம் என்கிற பெயரில் படைப்பாக்கினார். அதன் திரை வடிவில் தான் பா. விஜய் நடிக்கிறார்.
பா. விஜய் தாய் காவியத்தில் நடிப்பது பற்றிய அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், "என் படத்தில் முதல்ல பாட்டெழுதி இன்றைக்கு இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார் பா.விஜய். அவரோட எந்த முக்கியமான நிகழ்ச்சிக்கும் என்னை கூப்பிட்டு சந்தோஷப்படுத்திட்டு வர்றார். பல பேருக்கு நடிக்க ஆசை இருக்கு. பா விஜய் நடிக்கிற யோசனையை சொன்னபோது நான் முகத்துக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற மாதிரி வேடத்துல நடிக்கணும்னேன். நடிப்பு சுலபமான விஷயமில்லை" என்றார்.
|
இப்போ நடிக்க திறமைசாலிகள் தேவைப்படுது. அதனால்தான் டைரக்டர், டான்ஸ்மாஸ்டர், கவிஞர் எல்லாம் நடிக்க வர்றாங்க. நடிகருக்குப் பெரிய தகுதி மக்களைக் கவரணும். அந்த வித்தை பா. விஜய்க்கும் வரணும்" என்றார்.
"புகழ்பெற்ற நாவலைத் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு பண்ணின போதே பா. விஜய்க்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு தெரியுது" என்றார் சுப்ரமணியம் சிவா.
"சினிமா ரிஸ்க் என்று தெரிந்தே இதற்கு வந்திருக்கிறேன்" என்றார் தாய்காவியம் தயாரிப்பாளர் கே.பி. நாராயணன்.
"விஜய் என் இளைய சகோதரன்" என்ற வித்யாசாகர் பா. விஜய் வெற்றி பெற வாழ்த்தினார்.
திரைப்படக் கல்லூரி பேராசிரியர் மதன் கேப்ரியேல் பா. விஜய்க்கு நடிப்புப் பயிற்சி அளித்து வருகிறவர். அவர் பேசும்போது - எம்.ஜி.ஆர். புனே சென்றபோது திரைப்படக் கல்லூரியை பார்த்துவந்தார். வந்தவர் கலைஞரைச் சந்தித்து நம் மாநிலத்திலும் அமைக்க கேட்டுக் கொண்டார். அதன்படி கலைஞர் ஆட்சியில் 1971ல் திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்ட தகவலைக் கூறினார்.
தாய் காவியத்தை இயக்கும் பாலி ஸ்ரீரங்கம், திரைப்படக் கல்லூரி மாணவர். பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
பாலி பேசும்போது தாய் நாவல் பொடோப்பியன் என்பவரால் 1926ல் ஒரு மெளனப் படமாக - ஊமைப் படமாக எடுக்கப்பட்ட தகவலைக் கூறினார்.
அடுத்து பா. விஜய் பேசினார், "கூழாங்கல்லுக்கு வைரத்தின் மதிப்பை கொடுத்தவர். எனக்கு அர்த்தத்தை கொடுத்தவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர்தான் என்னை 1996ல் பாடலாசிரியராக்கினார். அவரை நான் அண்ணா என்பேன். அதில் உள்ளே அம்மா என்பது இருக்கிறது. அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு படத்திற்கு இசை பெரிய பக்கபலம் என்று உணர்த்த வைப்பவர் வித்யாசாகர். இந்த தாய் காவியத்துக்கு கால கட்டத்தைச் சித்தரிப்பதில் இசைக்கு முக்கிய பங்குண்டு. முதுகெலும்பு போன்ற அந்த பணிக்குரியவராக வித்யாசாகர் இருக்கிறார்.
|
தாய் காவியம் படத் தொடக்க விழா அக்டோபர் 20ல் கலைஞர் இல்லத்திலேயே நடைபெற உள்ளது. ஒரு வெளிநாட்டு நாவல் முழுப் படமாக தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும். கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு - முத்துகணேஷ், இசை - வித்யாசாகர், பாடல்கள் - வாலி. இயக்கம் பாலி ஸ்ரீரங்கம். கலைஞர் வெள்ளித்திரை நிறுவனம் தயாரிக்கிறது.
