சங்கப் பொன்மொழிகள் 1: நெல் பல பொலிக! பொன்பெரிது சிறக்க!

Author இலக்குவனார் திருவள்ளுவன்| Last Modified செவ்வாய், 21 அக்டோபர் 2014 (13:07 IST)
பண்டைத் தமிழ்நாட்டின் நாகரிக உயர்வையும் பண்பாட்டுச் சிறப்பையும் வரலாற்றுக் கூறுகளையும் விளக்குவன சங்க இலக்கியங்கள் என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்கள் ஆகும். எட்டுத் தொகையுள் ஒன்று ஐங்குறுநூறு.

சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் முடிவேந்தர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும் நல்லிசைப் புலவரைக் கொண்டு தொகுத்த நூலே ஐங்குறுநூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளைப் பற்றியும் திணைக்கு நூறு என 500 சிறு பாடல்கள் தொகுக்கப்பெற்ற நூல்
ஆதலால் ஐங்குறுநூறு எனப்பெற்றது.
இவற்றுள் முதலில் வரும் மருதத் திணையைப் பாடியவர் புலவர் ஓரம்போகியார். இவர் முதல் பாடலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த பொன்மொழியே, “நெல்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!“ என்னும் வாழ்த்தாகும்..

நெல் முதலிய கூலங்கள் - அஃதாவது தானியங்கள், பெருக வாழ்த்துகிறார் புலவர் ஓரம்போகியார். உணவுப் பொருள்கள் பெருகினால் பசித்துன்பம் யாருக்கும் இருக்காது அல்லவா?
வேண்டிய அளவு உண்டு வாழும் பொழுது நலமாக வாழலாம் அல்லவா? நலமாக வாழும் பொழுது சிறப்பாகப் பணியாற்றலாம் அல்லவா? எனவே வளமான வாழ்விற்கு அடிப்படையான உணவுப் பொருள்கள் பெருக வாழ்த்துகிறார்.

‘பொன் பெரிது சிறக்க’ என்று சொல்லும் பொழுது செல்வங்கள் பெருக வாழ்த்துகிறார் எனலாம்.

பொன் என்பது முற்காலத்தில் தங்கத்தை மட்டும் குறிக்கவில்லை. கரும்பொன், செம்பொன் என்றெல்லாம் பொதுவாக அனைத்து மாழைகளும் - அஃதாவது உலோகங்களும், பொன் என்றே குறிக்கப் பெற்றன. கரும் பொன்னாகிய இரும்பினால்தானே பல கருவிகள் செய்யப்படுகின்றன. பொன் மிகுதியானால் கருவிகளையும் வேண்டிய அளவு செய்யலாம் அல்லவா? கருவிகள் இருப்பின் தொழில் வளத்தில் சிறக்கலாம் அல்லவா?
எனவே, பொன்பெரிது சிறக்க என்பது ஒரு வகையில், தொழில் வளத்தில் சிறப்பதையும் குறிக்கிறது எனலாம். ஆக நாட்டைப் பொருத்தவரை வேளாண்மையிலும் தொழிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம் நாம்! வீட்டைப் பொறுத்தவரை உணவுப் பொருள்களும் செல்வமும் குவிந்து இல்லாமை இல்லாமல் ஆகட்டும் என வாழ்த்தலாம் நாம்! வாழ்த்தலாம் நாம் எனில் என்ன பொருள்? நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்தி வளமாவோம் எனப் பொருள்.

“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். பொருள் இல்லாதவரை ஒரு பொருட்டாக யாரும் மதிக்க மாட்டார்கள் என்றும் அவரே கூறுகிறார். இல்லானை இலலாளும் வேண்டாள் அல்லவா?

ஆகப் பொருளாகிய செல்வம் பெருகவும் உணவுப் பொருள் பெருகவும் உழைக்க வேண்டும்! சலிப்படையாமல் உழைக்க வேண்டும்! ஓயாமல் உழைக்க வேண்டும்! இவ்வாழ்த்தின் நோக்கம் சோம்பலை விரட்டியடிக்க வேண்டும்! துரத்தியடிக்க வேண்டும்! என்பதுதான்.

உழைக்காதவனைக் கண்டால் நிலம் என்னும் நங்கை வெட்கப்படுவாள் என்று அல்லவா தெய்வப் புலவர் கூறுகிறார். “அடடா! நம்மைப் பண்படுத்தி வளப்படுத்தாத ஒரு சோம்பேறியிடம் அல்லவா நாம் அடைக்கலமாகி உள்ளோம்” என அவனிடம் இருக்கும் நில மங்கை வெட்கப்பட்டு வேதனைப்படுவாளாம். நிலமகள் வேதனைப்படும் பொழுது வளமாக நாம் எங்ஙனம் வாழ இயலும்? எனவே, நம் உழைப்பில் பிழைப்போம் என்னும் உறுதியை எடுத்துக்கொண்டு உழைத்தால், நெல்பல பொலியும்! பொன்பல பெருகும்!
இன்றைக்கு நாம் பிறந்த நாளாக இருந்தாலும் பதவி பெற்று வாழ்வில் சிறந்த நாளாக இருந்தாலும் திருமண நாளாக இருந்தாலும் வேறு சிறப்பு நாளாக இருந்தாலும், ஆங்கிலத்தில் வாழ்த்துவதையே பெருமையாகக் கருதுகிறோம்! ஆங்கிலத்தில் வாழ்த்தப்படுவதையே சிறப்பாகக் கருதுகிறோம். அறியாமலும் புரியாமலும் பொதுவாக நாம் வாழ்த்தை வெளிப்படுத்துவதைவிட மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாம் அடைய வேண்டிய சிறப்பைக் குறிக்கும் வகையிலும் வாழ்த்துவதுதானே நமக்கும் சிறப்பு! வாழ்த்தைப் பெறுவோருக்கும் சிறப்பு!

அந்த வகையில், பிறர் அடைய வேண்டிய சிறப்பை நம் தமிழில் குறிப்பிட்டு வாழ்த்தும் பொழுது நம் எண்ணத்திற்கு வலிமை உண்டாகி வாழ்த்து நிறைவேறும். எனவே, போலியான பிறமொழி வாழ்த்தைவிட உண்மையான நம்மொழிவாழ்த்தே நலம் சேர்க்கும்! வளம் சேர்க்கும்! என்பதைப் புரிந்து நற்றமிழில் வாழ்த்துவோம்.

எனவே, சங்கப் பொன்மொழிகளைப் படிக்கும் ஒவ்வொருவர் இல்லத்திலும்
நெல்பல பொலிக!
பொன்பெரிது சிறக்க!


இதில் மேலும் படிக்கவும் :