திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (10:22 IST)

ஆர்சிபியின் தொடர் தோல்வி.. இனி நான் விளையாட மாட்டேன்!? – மேக்ஸ்வெல் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Glen Maxwell
நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் க்ளென் மேக்ஸ்வெல் இனி ஆர்சிபி போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.



நடப்பு ஐபில் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ஆர்சிபி நிலையோ கவலைக்கிடமாக உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் இந்த முறையாவது ஆர்சிபி கப் அடிக்காதா என்ற எதிர்பார்ப்புடன்தான் ரசிகர்கள் போட்டிகளை காண்கின்றனர். இந்த முறையும் ஆரம்பத்தில் அந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் ஆர்சிபியின் தொடர் தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளது. இனி ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்வதே சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

நேற்று நடந்த போட்டியிலும் இறுதி வரை போராடியும் ஆர்சிபி வெற்றி பெறவில்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் 3 முறை டக் அவுட்டாகி அதிர்ச்சிதான் கொடுத்தார். அதை தொடர்ந்து நேற்றைய போட்டியில் அவர் விளையாடவே இல்லை. இனிவரும் போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகமே என்கிறது ஆர்சிபி தரப்பு.


இதுகுறித்து பேசியுள்ள மேக்ஸ்வெல் “நான் கடந்த போட்டி முடிந்ததுமே நேராக டூ ப்ளெசியிடமும், பயிற்சியாளர்களிடமும் சென்று எனக்கு பதிலாக வேறு வீரரை விளையாட செய்வதற்கான நேரம் இது என்றேன். எனக்கு இதற்கு முன்னாலும் இப்படி நடந்துள்ளது. எனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவு ஓய்வு தேவை. மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்குமானார் அதற்குள் என்னை நான் திடப்படுத்திக் கொள்வேன்” என கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக உடைந்த காலுடன் நின்று இரட்டை சதம் அடித்தவர், ஆர்சிபிக்காக அரைசதம் கூட அடிக்காததுடன், தற்போது போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K