1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2016 (16:56 IST)

தொடரை இழந்தது இந்தியா: மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா அஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது. 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


 
 
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 295 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. விராட் கோஹ்லி 117 ரன்கள், தவான் 68 ரன்கள், ரஹானே 50 ரன்கள் அடித்து இந்திய அணியை 295 ரன் சேர்க்க உதவினர். 50 ஓவருக்கு 6 விக்கெட்டை இழந்து 296 ரன்னை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வழக்கம் போல சிறப்பாக பொருமையாக விளையாடியது. ஆரோன் ஃபின்ச் 21 ரன்னில் வெளியேறினாலும் மார்ஷ் 62 ரன் சேர்த்து அணிக்கு உதவினார். கேப்டன் ஸ்மித் தன் பங்கிற்கு 41 ரன் சேர்த்து அணியை முன்னேற்றினார். ஜார்ஜ பெய்லி 23 ரன்னில் வெளியேற, மிட்சல் மாஷும் 17 ரன்னில் நடையை கட்ட இந்திய அணிக்கு ஓரளவு பிரகாசம் தெரிந்தது.
 
ஆனால் மறுமுனையில் கிளன் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 96 ரன் எடுத்து இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டி தொடரை கைப்பற்றியது. இந்தியா தரப்பில் யாதவ், ஸ்ரன், ஜடேஜா ஆகியோர் தலா 2 விகெட்டுகளை கைப்பற்றினர்.