1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:08 IST)

ஆஃப்கானிஸ்தான் நெருக்கடி: பதவி விலகுவாரா அதிபர்?

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக மாட்டார் என்பது இன்று அவர் விடுத்துள்ள செய்தியில் இருந்து தெளிவாகிறது என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.
 
சிதறிக்கிடக்கும் பாதுகாப்பு படையினரை ஒருங்கிணைப்பது, தாலிபன்களுக்கு எதிரான தாக்குதலை தொடருவது என்றவாறு தமது திட்டங்களை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அதிபர் அஷ்ரஃப் கனி தெளிவுபடுத்தியிருப்பதாக சிக்கந்தர் கெர்மானி தெரிவித்தார்.
 
எனினும், தற்போது பல நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றி வருவதைத் தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருவது அரசுக்கு ஒருவித நடுக்கத்தையே ஏற்படுத்தியிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
 
அச்சத்தில் பொதுமக்கள்
 
தற்போது தலைநகர் காபூலில் தாலிபன்களின் நடவடிக்கைகக்கு ஆதரவாக இல்லாவிட்டால்தான் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் முன்னேறிய நடவடிக்கைகள் தொடர்பாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இதே போக்கில் தாலிபன்கள் முன்னேறி வந்தால், 30 நாட்களில் தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றக்கூடும் என்று கணித்துள்ளது. கடைசியாக நேற்று காபூலில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள லோகார் மாகாண தலைநகர் புல் இ ஆலம் என்ற நகரை தாலிபன்கள் கைப்பற்றினார்கள்.
 
ஆஃப்கானிஸ்தானின் இரண்டாவது நகரான கந்தஹாரை கைப்பற்றிய பிறகு அந்த நாட்டின் பாதி முக்கிய நகரங்கள் தாலிபன்கள் வசம் வந்துள்ளன. அங்குள்ள நிலைமை கையை மீறிச் செல்வதாகவும் அங்கு மோதல் தொடர்ந்தால், அதற்கு அதிக விலையை கொடுப்பவர்கள் பொதுமக்களாகவே இருப்பர் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.
 
மீண்டும் ஷரிய சட்டம்: தாலிபன்கள் உறுதி
 
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தகாத உறவு கொண்டால் கல்லடி தாக்குதல், திருட்டு குற்றத்துக்கு கால்களை முடமாக்குதல், 12 வயதுக்கு பிறகு சிறுமிகள் பள்ளி செல்ல தடை உள்ளிட்ட தமது ஷரிய சட்டங்களை அமல்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக தாலிபன்களின் முன்கள தளபதிகளும் களத்தில் உள்ள வீரர்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.