1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (22:40 IST)

இரானிய பெண் இயக்குநர் தனது முடியை வெட்டி கேரள சர்வதேச பட விழாவுக்கு அனுப்பியது ஏன்?

Shooting
கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு தனது முடியை அனுப்பி வைத்த இரானிய இயக்குநர் ஒருவரின் பெயர் அண்மையில் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது. அதற்கு என்ன காரணம்?
 
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) வழங்கப்பட்ட சினிமாவின் ஆன்மா விருதைப் பெற மஹ்னாஸ் மஹாமதியால் கடந்த வாரம் இந்தியா வர முடியவில்லை. 
 
2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது, பல தடைகளை எதிர்கொண்டாலும் சினிமா மீதான தாகத்தை தளரவிடாமல் முன்னோக்கி எடுத்துச் செல்வோருக்கு வழங்கப்படுகிறது.
 
இரானிய அரசாங்கம் மீது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்கும் மஹ்னாஸ் மஹாமதியால் கடந்த மார்ச்சுடன் காலாவதியான அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியவில்லை. 
 
திருவனந்தபுரத்தில் டிசம்பர் 9-ம் தேதி நடந்த கேரள சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கான விருதை கிரேக்க இயக்குநர் அதீனா ரேச்சல் சங்கரி மற்றும் நடுவர்க் குழு உறுப்பினர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 
பின்னர் மஹ்னாஸ் மஹாமதியின் முடியை அதீனா ரேச்சல் சங்கரி எடுத்துக் காட்ட, பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆரவாரம் செய்தனர். 
 
“நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் எதிர்கொள்ளும் சோகத்தின் சின்னமே அந்த வெட்டப்பட்ட முடி” என்று இமெயில் மூலம் பிபிசியிடம் பேசிய மஹ்னாஸ் மஹாமதி தெரிவித்தார்.
 
திரைப்பட விழாவில் தனக்குக் கிடைத்த வரவேற்பை கண்ட போது, கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார். 
 
 
இரானிய இயக்குநர் அனுப்பி வைத்த முடியைக் கண்டதும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்
 
இரானில் நடைமுறையில் உள்ள கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராக பெண்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
பொதுவெளியில் பெண்கள் தலைக்கு முக்காடிட்டுக் கொள்வதுடன், உடலமைப்பை மறைக்கும் வகையில் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும் என்பதை அந்த சட்டங்கள் வலியுறுத்துகின்றன.
 
தலைநகர் டெஹ்ரானில் கடந்த செப்டம்பரில் ஹிஜாப் சட்டங்களை மீறியதாக அறநெறி காவலர்களால் பிடிக்கப்பட்ட, சாகேஸ் நகரத்தைச் சேர்ந்த மேசா அமினி என்ற குர்திஷ் பெண் திடீரென மயக்கமுற்று பின்னர் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. 
 
அதன் பிறகு, இரானிய பெண்கள் பொதுவெளியில் தீ மூட்டி தங்களது ஹிஜாப்களை எரித்தனர். அவர்களுக்கு ஆதரவாக உடனிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் அவர்களது முடியை வெட்டி வீடியோவாக பதிவிட்டனர். 
 
இரானில் 1979-ம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு அமைந்த பிறகு, அந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான சவாலாக இந்த போராட்டம் கருதப்படுகிறது. அரசுப் படைகளால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
 
சுதந்திர வாழ்க்கை வேண்டி இரானிய பெண்கள் முன்வைக்கும் உரிமைக் குரலின் நீட்சியே இந்த போராட்டங்கள் என்பது மஹ்னாஸ் மஹாமதியின் கருத்து. 
 
“போராட்டக்காரர்களிடம் இழப்பதற்கு ஏதுமில்லை. அவர்கள் தங்கள் உயிரோடு போராடுகிறார்கள். ஏனெனில், இரானிய சர்வாதிகார அரசு அவர்களுக்கு வேறு எதையும் விட்டுவைக்கவில்லை.” என்று அவர் கூறுகிறார். 
 
டெஹ்ரானில் பிறந்தவரான மஹ்னாஸ் மஹாமதி, இரானில் கடந்த 2 தசாப்தங்களாகவே பெண்ணுரிமைக்கான குரலாக ஒலித்து வருகிறார். 
 
 2003-ம் ஆண்டு நிழல்கள் இல்லாத பெண்கள் (Women Without Shadows) என்ற தனது முதல் ஆவணப்படத்திலேயே, அரசு நடத்தும் காப்பகங்களில் தங்கியுள்ள வீடற்ற, கைவிடப்பட்ட பெண்களின் வாழ்க்கையை அழுத்தமாக பதிவு செய்தார். சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் ஏராளமான விருதுகளைக் குவித்தது. 
 
2019-ம் ஆண்டு அவர் இயக்கிய மகன் தாய் (Son Mother) என்ற திரைப்படம் 44-வது டோரண்டோ சர்வதேச திரைப்பட விழழவில் திரையிடப்பட்டது.
 
இந்த படம் 14-வது ரோம் திரைப்பட விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருதை வென்றது. 
 
47 வயது நிரம்பிய இயக்குநர் மஹ்னாஸ் மஹாமதி சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. 
 
2008ம் ஆண்டில், பயணக்கட்டுரை (Travelogue) என்ற ஆவணப்படம் எதிரொலியாக அவர் பயணங்கள் மேற்கொள்ள இரானிய அரசு தடை விதித்தது. டெஹ்ரான் – அங்காரா ரயிலில் படமாக்கப்பட்ட அந்த ஆவணப்படம், ஏராளமான இரானியர்கள் நாட்டை விட்டு ஓடுவது ஏன்? என்பதை ஆவணப்படுத்தியது. 
 
அதற்கு ஓராண்டு முன்பாக, மற்ற பெண்ணுரிமை ஆர்வலர்களை விசாரிப்பதை எதிர்த்து போராடியதற்காகவும், இரானிய அதிபர் அகமது நிஜாத் மீண்டும் தேர்வானதற்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நீடா ஆகா சுல்தான் என்ற 26 வயது பெண்ணின் கல்லறையில் மாலை போட்டதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். 
 
2014-ம் ஆண்டு, இரான் அரசுக்கு எதிராக பரப்புரை செய்தமைக்காக அவர் 5 ஆணடுகள் சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது. 
 
“என் வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாடுகளினூடேதான் கழிந்தது” என்கிறார் மஹ்னாஸ் மஹாமதி. இரானின் ஆணாதிக்க சமூக கட்டமைப்பால் ஆண்கள் பலன் பெறுகிறார்கள். ஆனால், பெண்களோ பாலினத்தின் அடிப்படையில் அடிமைத்தனத்திலேயே இன்னும் உழல வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறுகிறார். 
 
“இரானிய பெண்களைப் பொருத்தவரை, பல்வேறு பாகுபாடுகளின் சின்னமாக ஹிஜாப் திகழ்ந்தது. அது 7 வயதிலேயே பள்ளியில் எங்கள் மீது திணிக்கப்பட்டது; எங்கள் சிந்தனைக்கும் திரையிடப்பட்டது” என்று ஆவேசத்துடன் கூறுகிறார் மஹ்னாஸ் மஹாமதி. 
 
இவ்வாண்டு தொடக்கத்தில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதை முன்னிறுத்தி இந்தியாவில் சமூகத்தை பிளவுபடுத்தும் விவாதங்கள் எழுந்துள்ள வேளையில் இரானில் பெண்களின் போராட்டம் வெடித்துள்ளது.
 
கர்நாடக அரசின் ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியான தீர்ப்பு வராததால் பிரச்னைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
 
இந்தியாவில் நடக்கும் ஹிஜாப் விவாதங்கள் மீதான உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது, “நாம் ஹிஜாப்பிற்கு எதிராக இருக்கக் கூடாது. ஹிஜாப் அணிவதா, வேண்டாமா என்பதை தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கே என்பதுதான் நம் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.” என்று உறுதிபடக் கூறினார் மஹ்னாஸ் மஹாமதி.