வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (13:43 IST)

டோக்யோ ஒலிம்பிக்: தொடங்கும் முன்பே புதிய சாதனை, போட்டிகளை எப்படி பார்ப்பது?

கடந்த 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை. ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, இந்திய நேரப்படி இன்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இது ஒலிம்பிக் போட்டியின் அதிகாரபூர்வத் தொடக்கமாக இருக்கும்.

இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சார்பாக சுமார் 11,300-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் போட்டியிட இருக்கின்றனர்.அகதிகள் அணி சார்பாக 12 விளையாட்டுகளில் 29 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2016 பிரேசிலின் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது.

இந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே, சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், பேஸ்பால் / சாஃப்ட்பால், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

டோக்யோ ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை சோனி லைவ் செயலி வழியாகவோ, சோனி டென் விளையாட்டு தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவோ காணலாம். டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.டோக்யோ நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கூட 1,000 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் ஆகியோர் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என ராய்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. 1920ஆம் ஆண்டு, பெல்ஜியத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதல்முறையாக இந்தியா சார்பாக ஆறு பேர் கொண்ட ஓர் அணி கலந்து கொண்டது. அதுவும் தொராப்ஜி டாடாவின் முன்னெடுப்பால்தான் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கியது.

டோக்யோ ஒலிம்பிக்கில் 120-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியா சார்பாக கலந்து கொள்ள இருக்கின்றனர். இது வரை எந்த ஒலிம்பிக்கிலும் கலந்துகொண்ட இந்திய வீரர்கள் எண்ணிக்கையைவிட இது அதிகம். இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவு 11.5 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் இருக்கலாம் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டி கடந்த 2020ஆம் ஆண்டு திட்டமிட்டபடி நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதால் மட்டும் சுமார் இரண்டு பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் அளவுக்கு செலவு அதிகரித்துள்ளது எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

போன்களை உருக்கி உலோகம் எடுத்து...

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்களுக்காக 62 லட்சம் பழைய மொபைல் ஃபோன்களை உருக்கி உலோகங்களை எடுத்துள்ளார்கள். ஒரு தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் இருக்கும். ஆனால், இது முற்றிலும் தங்கம் அல்ல. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், போர் காரணமாக ரத்தாயின. 2024 ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் ஏற்று நடத்தவிருக்கிறது. இன்று தான் அதிகாரபூர்வமாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படுகின்றன என்றாலும், ஜூலை 21ஆம் தேதி முதலே தகுதி சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன.கொரிய குடியரசைச் சேர்ந்த ஆன் சான் என்கிற வில்வித்தை வீராங்கணை, தகுதிச் சுற்றிலேயே 680 புள்ளிகளைப் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்திருக்கிறார்.

இச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி 663 புள்ளிகளோடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். தீபிகா காலிறுதிச் சுற்றில், கொரியாவின் ஆன் சானை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஸ்போர்ட்ஸ்டார் வலைதள செய்தி கூறுகிறது.டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கமே புதிய ஒலிம்பிக் சாதனைகளோடு தொடங்கி இருப்பது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.