ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (08:02 IST)

தயிர் பாக்கெட்டில் 'தஹி' என்ற சொல்: "இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்" - அமைச்சர் நாசர்!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விநியோக மையமான ஆவின் அதன் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியில் ‘தஹி’ என்று குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது, தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது.
 
இந்த உத்தரவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதியன்று வெளியிட்டது. அந்த உத்தரவுக்குப் பல மாறுபட்ட கருத்துகள் வந்ததால், இந்தியில் ‘தஹி’ என்று பயன்படுத்த வேண்டுமென்ற உத்தரவைத் திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது.
 
மேலும், பால் பொருட்களில் தயிர் என்ற சொல்லுடன் அதற்குரிய பிராந்திய பெயரைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் அறிவித்துள்ளது.
 
ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். இந்தி மொழி திணிப்பை நிறுத்துங்கள்.
குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன் தொலைந்துவிடுவீர்கள்,” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் ஆவின் போன்ற மாநில கட்டுப்பாட்டில் செயல்படும் ‘நந்தினி’ என்ற பால் உற்பத்தி நிறுவனத்திற்கும் இந்தியில் ‘தஹி’ என்று தயிருக்கு பதிலாகப் பயன்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
 
அதற்கான FSSAI ஆணையத்தின் உத்தரவில், கர்ட் என்று ஆங்கிலத்திலும் தயிர் என்று தமிழிலும் குறிப்பிடப்படுவதற்கு பதிலாக தஹி என்று இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதேபோல் கர்நாடகாவில் மொசரு என்று அழைக்கப்படும் தயிர் பாக்கெட்டின் லேபிளில் தஹி என்று இந்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
 
கூடவே, மொசரு என்றும் தயிர் என்றும் பிராந்திய மொழிப் பெயர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிடலாம் என்றும் அந்த உத்தரவு கூறியது.
 
இதுகுறித்து ட்வீட் செய்த ஹெச்.டி.குமாரசாமி, “கன்னட மக்கள் இந்தி மொழித் திணிப்பை எதிர்ப்பது தெரிந்திருந்தும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் இந்தி மொழியில் நந்தினி தயிர் பாக்கெட்டில் குறிப்பிடச் சொல்கிறது. நந்தினி கன்னட மக்களுடைய உற்பத்தி. அது கன்னட மக்களின் அடையாளம். இது தெரிந்திருந்தும் இந்தி மொழித் திணிப்பு செய்யப்பட்டுள்ளது,” என்று விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும்கூட இந்த விஷயத்தில் FSSAI தனது இந்தி மொழி பயன்பாடு குறித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
அவர் அதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “பிராந்திய மொழியை பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘தஹி’ என்று பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோதி எப்போதும் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். முதல்முறையாக, குழந்தைகள் தங்களுடைய தாய்மொழியிலேயே கல்வி கற்க வழி செய்யும் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
 
பல்வேறு சர்வதேச மேடைகளில், பிரதமர் தமிழ் மொழியின் பெருமை குறித்தும் அதன் இலக்கியம் குறித்தும் பெருமையாகப் பேசியுள்ளார். ஆகவே உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையத்தின் இந்த உத்தரவு பிரதமரின் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்கு எதிராக உள்ளது.
 
தமிழ்நாடு பாஜகவின் சார்பாக நாங்கள் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். மாநிலக் கட்டுப்பாட்டில் இருக்கும் பால் கூட்டுறவு அதன் பிராந்திய மொழியைப் பயன்படுத்த அனுமதியுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த உத்தரவு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், “அடிக்கடி மத்திய அரசு தனது சுயரூபத்தைக் காட்டவேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் இதுபோன்று இந்தித் திணிப்பை இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்கின்றனர். இது அவர்களது இயற்கையான குணாதிசயம்.
 
அந்த அடிப்படையில் ‘தஹி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு ஜனவரி 11ஆம் தேதி அனுப்பினார்கள். ஆனால் இது பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழக்கமாக இருக்கும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதன் அடிப்படையில், நாங்கள் தஹி எனப் பயன்படுத்த மாட்டோம். இருமொழிக் கொள்கையின் அடிப்படையில் தயிர் என்றும் அதன் ஆங்கிலப் பெயரையும்தான் போடுவோம்.
 
இதேபோல் ஓராண்டுக்கு முன்பு பால் பாக்கெட்டுகளில் ‘தூத்’ என்று இந்தியில் போடுமாறு கூறினார்கள். அதையும் நாங்கள் முடியாது என்றுதான் கூறினோம். இதேபோன்ற உத்தரவு, கர்நாடகாவுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களும் அப்படிக் குறிப்பிட முடியாது என்று மறுத்துவிட்டார்கள்,” என்று தெரிவித்தார்.
 
மேலும், திமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்தி எந்தப் பக்கத்தில் இருந்தும் மாநிலத்திற்குள் நுழைய முடியாது என்று கூறியவர், “நாளொன்றுக்கு 60 லட்சம் பாக்கெட்டுகள் தயிர், பால் என பால் பொருட்களை விநியோகம் செய்கிறோம். அவற்றில் இவர்கள் சொல்லும் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார்.
 
அதோடு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்துப் பேசியவர், “தேர்தல் நெருங்குவதால் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். அது அவர்களுடைய சொந்தக் கருத்து,” என்று கூறினார்.
 
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது குறித்துப் பேசியவர், “முதலில் ஏன் அத்தகைய உத்தரவைப் போடவேண்டும், பிறகு ஏன் அதை நீக்க வேண்டும். நேரு காலத்திலேயே இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர் நீத்தவர்கள் நாங்கள். இதற்கு அஞ்சுவோமா! இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை,” என்று தெரிவித்தார்.