1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2016 (01:16 IST)

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மறைந்திருக்கும் மர்மங்கள்

சென்னையின் பிரபல கல்விக் குழுமம் ஒன்றின் தலைவர், மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு பணம் வாங்கிவிட்டு அதனைத் திரும்பத் தராதது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 

 
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறிப்பிட்ட அளவு இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு அளித்துவிட்டு மீதமுள்ள இடங்களை தாங்களே நிரப்புகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, எல்லா இடங்களையும் அந்தப் பல்கலைக்கழகங்களே நிரப்புகின்றன.
 
தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தாங்களே இடங்களை நிரப்பும்போது, அதற்கென பெரும்தொகையை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. இந்த ஆண்டுக்கான இடங்கள் முந்தைய ஆண்டே, நிரப்பப்படுவதாகவும் புகார்கள் உண்டு.
 
இம்மாதிரி மருத்துவக்கல்லூரி இடங்கள் நிரப்பப்படும்போது, இடைத்தரகர்கள் மூலமாகவே பணம் கல்லூரிகளுக்கு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இடைத்தரகர்கள் வெறுமனே மாணவர்களை அடையாளம் காட்டுவதோடு நின்றுவிடுவதாக, இம்மாதிரி பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெயர் தெரிவிக்க விரும்பாத இடைத்தரகர் கூறுகிறார்.
 

 
ஒவ்வொரு இடைத்தரகரும் ஒவ்வொரு கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு மாணவரிடமிருந்து கிடைக்கும் நன்கொடைத் தொகையில் இடைத்தரகர்களுக்கு 0.5 சதவீதம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறுகிறார் அந்த இடைத்தரகர்.
 
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால், ஒட்டுமொத்தமாக மத்திய அரசே ஒற்றைச் சாளர முறையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் ரவீந்திர நாத். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும் அரசே சேர்க்கையை நடத்தி, கட்டணங்களையும் நிர்ணயிக்க வேண்டும் என்கிறார் அவர்.
 
தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இங்கு ஒட்டுமொத்தமாக 3200 இடங்கள் இருக்கின்றன.