திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:29 IST)

உயிருக்கு போராடிய காகத்தை காப்பாற்றிய ரிக்ஷா ஓட்டுநர்- நெருங்கிய நண்பர்களானது எப்படி?

ஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன? நம்பும்படியாக இல்லையா? இக்கட்டுரையை படியுங்கள்.
புதுச்சேரியில் உள்ள ரிக்ஷா ஓட்டுநர் செல்வராஜ்தான் அந்தக் காகத்தின் நெருங்கிய நண்பர்.
 
புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம் அருகில் சுமார் 50 ஆண்டுகளாக ஒரு சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்ட் இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றலா பயணிகள் இங்கிருக்கும் சைக்கிள் ரிக்ஷாவில் சவாரி செய்து புதுச்சேரியை சுற்றி பார்க்க பெரிதும் விரும்புவர். இதே சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள 56 வயது செல்வராஜ் இந்த சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலை அவரது தந்தை ஆறுமுகம் அவர்களை தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக செய்துவருகிறார்.
இந்த ரிக்ஷா ஸ்டாண்ட் அருகில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காகம் ஒன்று அடிபட்டு பறக்க முடியாமல் தவித்து வந்தது. இதைக் கண்ட சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி செல்வராஜ் காகத்திற்கு தண்ணீர் கொடுத்து அருகே உள்ள நாய் பூனை போன்ற பிராணிகளால் காகத்திற்கு தொல்லையேதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் காகத்தை வைத்துப் பாதுகாத்தார்.
 
உடல் நலம் பெற்று பறந்து சென்ற காகம் அடுத்த நாள் முதல் செல்வராஜ் இருக்கும் இடத்திற்கு அருகில் செல்வதும் அவரை சுற்றி சுற்றி பறந்து திரிவதுமாய் இருந்தது. காகம் தன்னை சுற்றி வருவதை கண்ட செல்வராஜ் அதற்கு உணவு கொடுத்தார். நாட்கள் செல்ல செல்ல காகம் அவரிடம் நெருக்கமாக தொடங்கியது, வேறு இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து அந்த சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்ட் அருகாமையில் உள்ள மரத்திலே தனது கூட்டையும் கட்டியது காகம்.
 
ரிக்ஷா வண்டியில் செல்வராஜ் அமர்ந்திருக்கும் போது அவர் அருகில் சென்று கரைவது, அவர் மேலே உட்காருவது, அவர் சாப்பிடும் நேரங்கில் அவருடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவில் செல்வராஜுடன் காகம் நெருங்கி பழகியது. தினமும் காலை, மதியம் என இரு வேளைகளிலும் செல்வராஜுடன் சாப்பிடும் காகம், சாப்பிட்ட பிறகு அவரிடம் உணவை வாங்கி சென்று தனது குஞ்சுகளுக்கும் ஊட்டிவிட்டு வரும்.
 
இப்படி கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து வரும் இவர்களது நட்பு அங்கே உள்ள சக ரிக்ஷா வண்டி தொழிலாளர்களின் மத்தியில் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. "செல்வராஜை தவிர வேறுயார் அருகிலும் அது செல்லாது என்றும் வேறுயார் உணவு கொடுத்தாலும் அதை சாப்பிடவும் செய்யாது என்றும் சக ரிக்ஷா தொழிலாளிகள் சொல்கின்றனர்".
 
இது குறித்து செல்வராஜ் சொல்லும்போது, "கடவுள் கொடுத்த பாக்கியத்தால் தான் இப்படிப்பட்ட காகத்தின் நட்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காகத்தை எனது குடும்பத்தில் ஒருவனாக பார்க்கிறேன். நான் கொண்டுவரும் உணவுகளில் மீன், பூரி, முட்டை, தோசை போன்றவற்றை விரும்பி சாப்பிடும். சாப்பிடும்போது விளையாட்டாக வேறு காகத்திற்கு உணவை கொடுத்தால் கோபம் வந்து என்னை கொத்தவும் செய்யும். என்மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் நான் இல்லாத நேரங்களில் எனது ரிக்ஷா நிற்கும் இடத்தில் வந்து கரைத்துக்கொண்டே இருக்கும் என்கிறார்".
 
காகம் மனிதனிடம் இவ்வளவு நெருக்கமாக பழகுவது எப்படி என்று விலங்குகள் மற்றும் பறவைகள் நல ஆர்வலர் கார்த்திக் பிரபுவிடம் விளக்கம் கேட்டபோது "பொதுவாக அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இரு வகையானப் பழக்க முறைகள் மனிதர்களால் பின்பற்றப்படுகிறது. ஒன்று பாசமாகப் பழகும் முறை. இதில் உணவு கொடுப்பது, இரக்கம் காட்டுவது, அதன்மேல் அக்கறை எடுத்துக்கொள்வது போன்றது. மற்றொன்று பயம் ஏற்படுத்திப் பழகும்முறை. இதில் மிரட்டுவது, கற்களால் அடிப்பது, கம்பிகளால் குத்துவது போன்றவை. பொதுவாக விலங்கு மற்றும் பறவைகள் போன்ற பிராணிகளிடத்தில் சிறிய வயதிலிருந்து அவைகளிடம் அன்பாக பழகுவதால் மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் உணர்வு இந்த பிராணிகளுக்கு ஏற்படுகிறது.
 
காகத்தைப் பொறுத்தவரை இந்த பறவை நகர்ப் புறத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் என்பதால் காகத்திற்கு மனிதர்களின் மேல் பயம் இல்லாத உணர்வு பொதுவாகவே இருக்கும். ஆனால் இந்த காகமானது அடிபட்டிருந்த நேரத்தில் பாதுகாத்து, உணவு கொடுத்த பிறகு இவரிடத்தில் பழகியது. ஆகவே இவரிடத்தில் நமக்கு தேவையான உணவும் கிடைப்பதாலும், அவர் பாசமாகப் பழகுவதை தெரிந்துக்கொண்டு காகம் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு எங்கையும் செல்லாமல் அந்த இடத்தையும் அவரையும் சுற்றி வருகிறது " என்கிறார்.