திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (17:11 IST)

விவசாயிகள் போராட்டத்துக்கு ஜஸ்டின் ட்ரூடோ தரும் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா?

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பெயர் கடந்த செவ்வாய்க்கிழமை செய்திகளில் அதிகம் அடிபட்டது.

மோதி அரசின் புதிய விவசாய சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராடிவரும் இந்த விவசாயிகள் மீதான  இந்திய பாதுகாப்புப் படையினரின் அணுகுமுறை குறித்து ட்ரூடோ கவலை தெரிவித்ததோடு, தனது அரசு எப்போதும் அமைதியான போராட்டங்களுக்கு  ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.
 
ட்ரூடோவின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக்  ஸ்ரீவாஸ்தவா, ட்ரூடோவின் அறிக்கையை அரைகுறையானது, உண்மைக்கு அப்பாற்பட்டது என்று வர்ணித்தார்.
 
கனேடிய பிரதமரின் அறிக்கை தேவையற்றது மற்றும் ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது போன்றது என்று இந்திய வெளியுறவு  அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தை தான் கவனிக்காவிட்டால் அது தனது அலட்சிய போக்காக இருக்கும் என்று கனடாவின் சுமார் ஐந்து  லட்சம் சீக்கியர்களுக்கு குரு நானக் தேவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தான் வெளியிட்ட ஒரு ஆன்லைன் செய்தியில் ட்ரூடோ கூறியிருந்தார்,
 
"நிலைமை கவலை அளிக்கிறது. போராட்டம் நடத்திவரும் எல்லா விவசாயிகளின் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளேன். அமைதியான  எதிர்ப்புக்கான உரிமை குறித்து கனடா எப்போதும் விழிப்புடன் இருப்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை  நான் நம்புகிறேன். இது குறித்து இந்திய அதிகாரிகளுடன் நேரடியாக பேசியுள்ளேன்,"என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
 
தூதாண்மை பேச்சுவார்த்தைகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்று ட்ரூடோவின் அறிக்கை குறித்து அனுராக் ஸ்ரீவாஸ்தவா கருத்து  தெரிவித்தார்.
 
ட்ரூடோவின் கருத்துக்கு இந்தியா பதிலடி
 
ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து குறித்து இந்தியாவில் சமூக ஊடகங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் வெளியாயின.
 
"கனேடிய பிரதமர் ட்ரூடோ ஒரு ஜனநாயகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை ஆதரித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் . உலகத் தலைவர்கள் அனைத்து  நாடுகளிலும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக பேசுவது மிகவும் முக்கியமானது. உள் விவகாரத்தில் தலையீடு என்று சொல்பவர்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை, '' என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.
 
அதே நேரத்தில், மூத்த பத்திரிகையாளர் வீர் சாங்வி ட்ரூடோவின் அறிக்கையை விமர்சித்துள்ளார். "விவசாயிகளின் போராட்டம் பற்றி எனது கருத்து என்னவாக  இருந்தாலும், ட்ரூடோவின் அறிக்கை எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாட்டின் தலைவராக தனது அறிக்கை உலகளவில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதை  ஜஸ்டின் ட்ரூடோ அறிவார். தனது சீக்கிய ஆதரவாளர்களை மகிழ்விக்கவே இதை அவர் செய்துள்ளார்," என்று அவர் தனது ட்வீட் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
"இந்தியாவில் நம்மிடையே பல கருத்துவேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, நான் இந்த அரசின் ஆர்வலன் அல்ல. ஆனாலும், உள்நாட்டு பிரச்சனைகளை நாம்தான்  தீர்க்கவேண்டும் என்ற கொள்கையுடன் நான் இருக்கிறேன். இந்த அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே பல இந்தியர்கள் நமது உள் விவகாரங்களில்  மேற்கத்திய தலையீட்டை வரவேற்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒரு நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்ற வரம்பை ட்ரூடோ மீறியுள்ளதாக வீர் சாங்வி நம்புகிறார்.
 
"உலகின் பெரும்பாலான தலைவர்கள் இந்த வரம்பை மதிக்கிறார்கள். இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக தனது நாட்டின் சீக்கியர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் ட்ரூடோ உறுதியாக இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில் அவரது அறிக்கையில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்தியாவின்  ஆட்சேபணையும் இயல்பானது. இந்தியாவில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட ட்ரூடோவின் கருத்துக்களை ஏற்கவில்லை. இது உள் விவகாரங்களில்  தலையிடுவதாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர். வேறு எவருக்கும், குறிப்பாக மேலை நாடுகளுக்கு, நமது உள் விவகாரங்களை எவ்வாறு தீர்க்கவேண்டும்  என்று சொல்ல உரிமை இல்லை என்ற ஜவஹர்லால் நேருவின் வழியை இந்தியாவின் பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்," என்கிறார் சாங்வி.
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷம்மா முகமதும் ட்ரூடோவின் கருத்துக்களை ஒரு ட்வீட்டில் விமர்சித்துள்ளார். "நான் மோதி அரசின் விவசாய  சட்டத்திற்கு எதிரானவள். ஏனெனில் அது நமது விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது கனேடிய பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோவுக்கு நமது உள் விவகாரங்களில் தலையிட உரிமை அளிக்கவில்லை. நாம் ஒரு இறையாண்மை நாடு. நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது  என்பது நமக்குத் தெரியும்,"என்று ஷாமா முகமது குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோதி , 'இந்த முறையும் டிரம்ப் அரசு' என்ற கோஷத்தை ஆதரிக்க முடியும் என்றால், ட்ரூடோவை கேள்வி கேட்பது எவ்வளவு தூரம் சரியானது என்று சிலர் சமூக ஊடகங்களில் வாதிடத் தொடங்கினர்.
 
ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கை இந்திய அரசின் தூதாண்மை தோல்வி என்று முன்னாள் இந்தியதூதர் கேசி சிங், மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்துடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.
 
ட்ரூடோ, காலிஸ்தான் என்ற கற்பனையில் உள்ளவர்களின் பிடியின் கீழ் வந்திருந்தால், இது நடக்காமல் பார்த்துக்கொள்வது அரசின் வேலை என்று அவர் கூறினார். எத்தனை நாடுகளுக்குச் சென்று இது பற்றி போராடுவீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
"நீங்கள் கனேடிய பிரதமரிடம் அவருக்கு உண்மை தெரியாது என்று சொல்கிறீர்கள். உண்மை என்னவென்றால், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க டெல்லிக்கு வர  விரும்பினர். நீங்கள் அவர்களை வர அனுமதிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று ட்ரூடோ கூறியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக மோதி வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களை உள்நாட்டு அரசியலுக்காக பயன்படுத்துகிறார். அத்தகைய சூழ்நிலையில், அந்த நாடுகளில் வாழும்  புலம்பெயர்ந்தோர், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து தங்கள் கருத்தை கொண்டிருக்க முடியும். போராடுபவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும்  கவலைப்படுவதாக ட்ரூடோ கூறியுள்ளார். இதை ட்ரூடோ தவறான சந்தர்ப்பத்தில் கூறியது முற்றிலும் உண்மை. அவர் இந்த கருத்தை, குரு நானக் ஜெயந்தியன்று  சொல்லியிருக்கக்கூடாது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் இயக்கம் குறித்தும் ட்ரூடோ பேசினார். வருங்காலத்தில் பைடன் ஏதாவது சொன்னால், அவரிடமும்  சண்டைக்கு செல்வீர்களா?" என்று கேசி சிங் வினவுகிறார்.