1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (12:48 IST)

கால்பந்து வீரரின் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனான துருக்கி அதிபர்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜெர்மனி கால்பந்து வீரர் மேசுட் ஒஸிலின் திருமணத்தில், துருக்கியின் அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் மாப்பிள்ளை தோழனாக நின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஒஸில், கடந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு முன்னால் அதிபர்  எர்துவானோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது.
 
இந்த புகைப்படங்களால் ஜெர்மனியில் தான் அனுபவித்த "இனவெறி மற்றும் மரியாதை குறைவை" சுட்டிக்காட்டி சர்வதேச கால்பந்து  போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று மேசுட் ஒஸில் அறிவித்தார்.
 
30 வயதான அர்செனல் கால்பந்து கிளப் வீரரான மேசுட் ஒஸில், அவரது காதலியும், முன்னாள் மிஸ். துருக்கி அமினி குல்செயை, பாஸ்பரஸ்  ஆற்றின் கரையில் இருக்கும் ஆடம்பர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
 
2017ம் ஆண்டு முதல்முறையாக டேட்டிங் தொடங்கிய இந்த ஜோடி, 2018 ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக அறிவித்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் எர்துவானை தனது மாப்பிள்ளை தோழனாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க கேட்கப்போவதாக ஒஸில்  அறிவித்தது, துருக்கியில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது.
 
துருக்கி அதிபர் எர்துவான் பிரபல நட்சத்திரங்களின் திருமணங்களில் அடிக்கடி பங்குகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தல்  பரப்புரையின்போது அவர் இத்தகைய திருமணங்களில் கலந்து கொள்கிறார்.
 
இஸ்தான்புல்லில் நடைபெறும் மேயர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு முன்னால் நடைபெற்றுள்ள கால்பந்து வீர்ர் ஒஸிலின் திருமணத்திலும் எர்துவான் கலந்துகொண்டுள்ளார். இஸ்தான்புல்லில் முன்னதாக நடைபெற்ற தேர்தல் எர்துவானின் ஏகேபி கட்சியின்  வேட்பாளர் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது சர்வதேச அளவில் விமர்சனங்களை எழுப்பியிருந்தது.