மீறப்படும் மனித உரிமை மீறல்கள்" - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு

Sinoj| Last Modified வியாழன், 25 பிப்ரவரி 2021 (00:53 IST)

இலங்கை மனித உரிமை மீறல்பட மூலாதாரம்,OHCHR
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் புதன்கிழமை காணொளி வாயிலாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் விளக்கினார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பேச்சலெட்.
"எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்திருக்கிறது," என்று மீஷெல் பேச்சலெட் கூறினார்.

2015ஆம் ஆண்டில், மனித உரிமை மீறல் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்த பிறகும், தற்போதைய அரசு, அதன் முந்தைய ஆட்சியாளர்களை போலவே, உண்மையை கண்டறியவும் குற்றங்களுக்கு பொறுப்புடைமையாக்கும் நடவடிக்கையிலும் தோல்வி அடைந்தது.

போரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி அமைப்பு முறை, கட்டமைப்பு, கொள்களை, பணியாளர்கள் போன்றவற்றில் முந்தைய காலம் போலவே விதிமீறல்கள் தொடருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் முக்கியமான பணி, குறைகளுக்கு தீர்வு கண்டு முந்தைய விதிமீறல்கள் நடக்காதவாறு கவனிப்பதுதான்.
கடந்த ஆண்டு, முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான வகையில் சங்கடத்தை தரக்கூடிய போக்கு தீவிரமாக இருப்பதை எமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய ஆண்டுகளில் வளர்ந்து வந்த சிவில் சமூகமும் தன்னிச்சையான ஊடகமும் தற்போது வேகமாக சுருக்கி வருகின்றன. நீதித்துறை சுதந்திரம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் ஆகியவை, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் பலவீனமாக்கப்பட்டுள்ளன.
முக்கியமான சிவில் நிர்வாக பணிகளில் வளர்ந்து வரும் ராணுவ தலையீடு, ஜனநாயக ஆளுகை மீதான ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுகிறது. பிரத்யேக சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் காணப்படும் தொடர்ச்சியான தோல்வி அல்லது விதிமீறல்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காணாமல் இருப்பது, கொடூரமான குற்றங்கள் மற்றும் விதி மீறலில் குற்றம்சாட்டப்பட்ட ராணுவ அதிகாரிகளை பொறுப்புடைமைக்கு ஆளாக்காமல் விட்டுள்ளது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.
தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர், அரசின் உயர் பொறுப்புகள் உள்ளிட்ட பணிகளில் சேராத வகையில், பிளவுபடுத்தக்கூடிய மற்றும் தவறான சொல்லாடல்களால் தவிர்க்கப்படுகிறார்கள்.

சிறுபான்மை சமூகங்கள் கவலை

கோவிட்-19 சடலங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தகனம் செய்யப்படுவது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை சமூகங்களுக்கு வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நீண்ட கால அடிப்படையிலான அமைப்பு சார்ந்த பிரச்னைகள் இலங்கையில் தொடருகிறது.

கடந்த கால வன்முறைகள், இப்போதும் தொடரலாம் என்ற அபாய செய்தியின் அறிகுறி தெளிவாக தென்படுகிறது. அடுத்து வந்த அரசுகள், உண்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன. உண்மையில், மனித உரிமைகள் வழக்குகளில் அரசாங்கம் நீதி நடைமுறைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
முந்தைய ஆணையங்களின் கண்டுபிடிப்புகளை மறுஆய்வு செய்வதற்காக கடந்த ஜனவரியில் அமைக்கப்பட்ட ஆணையம், அர்த்தமற்ற முடிவின்றி அதே பாணியை தொடர்ந்திருக்கிறது. ஆணையம் முன்பு வழங்கிய பரிந்துரையை அமல்படுத்தாதவண்ணம், உண்மையான முன்னேற்றத்தை தேசிய நடைமுறைகள் மூலம் செயல்படுத்தும் வாய்ப்பை அரசு மூடி விட்டது.

இதுபோன்ற காரணங்களால், புதிய வகையிலான பொறுப்புணர்வை உள்ளடக்கிய தீர்வை ஆராயவும் எதிர்காலத்தில் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களை உறுதிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வழிமுறைகளை கையாளவும் வலியுறுத்துகிறேன் என்று மீஷெல் பேச்சலெட் தெரிவித்தார்.
தினேஷ் குணவர்த்தன, இலங்கை வெளியுறவு அமைச்சர்

ஆனால், மீச்செல் பேச்சலெட்டின் குற்றச்சாட்டுகளை முற்றுலுமாக நிராகரிப்பதாக எதிர்வினையாற்றினார் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

"உயர் ஆணையரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உறுப்பு நாட்டின் இறையாண்மையை, சுய மரியாதையை பாதிக்கக் கூடிய வகையில் இந்த அறிக்கை உள்ளது," என்று காணொளி வாயிலாக நிகழ்த்திய உரையில் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நல்லிணக்கம், நீதி வழங்குதல் போன்ற நடவடிக்கையில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறது. இதுநாள்வரை எந்த அடிப்படையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்களை கேட்டும் அது கிடைக்கவில்லை.

இலங்கை உள்விவகாரத்தில் ஒரு சில நாடுகளின் தன்னிச்சையான நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை, தவறான பிரசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்.
அறிக்கையில் உள்ள விவரங்கள், முழுமையாக ஆராயப்படாதவை. தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி அந்த அறிக்கையில் முழுமையாக பதிவாகவில்லை. முழுமையாக ஆராயப்படாமல் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை, அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய தீர்மானம் போன்றவற்றை மனித உரிமைகள் கவுன்சில் நிராகரிக்க வேண்டும்.

இந்த கவுன்சில் உள்பட ஐ,நாவுடன் சேர்ந்து மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை தொடர்ந்து ஈடுபாடு காட்டும் என்று இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மீதான விவாதம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

BBC Indian Sports Woman of the Yearஇதில் மேலும் படிக்கவும் :