1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (18:50 IST)

சிக்சர் படத்தின் காட்சிகளுக்கு கவுண்டமணி கடும் எதிர்ப்பு - காரணம் என்ன?

வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் சிக்சர் படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் தன் படத்தை பயன்படுத்தியிருப்பதற்கும் தன்னைப் பற்றி காட்சிகளை அமைத்திருப்பதற்கும் மூத்த நகைச்சுவை நடிகரான கவுண்டமணி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்தக் காட்சிகளை நீக்கி, மன்னிப்புக் கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


 
வைபவ் ரெட்டியை கதாநாயகனாக வைத்து, சாச்சி என்ற புதுமுக இயக்குநர் ‘சிக்சர்‘ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கதாநாயகனாக வரும் வைபவ் ரெட்டி, மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார்.
 
இந்தப் படம் நாளைதான் வெளியாகிறது என்றாலும், இந்தப் படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளியாகின.


 
அந்தக் காட்சிகளில் மாலைக் கண் நோயால் நோயால் அவதிப்படும் கதாநாயகன், தன் வீட்டில் உள்ள கவுண்டமணியின் புகைப்படத்தைப் பார்த்து, "தாத்தா... தாத்தா டேய்,சிறப்பா பண்ணிட்டடா, ராத்திரி என்னென்ன அக்கிரமம் பண்ணினியோ, எனக்கு 6 மணிக்கு மேல கண்ணு தெரியாம போச்சுடா" என்று பேசுவதைப்போல வசனம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள கவுண்டமணி, படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
இம்மாதிரி காட்சிகளை அமைத்திருப்பதன் மூலம் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருப்பதாகவும் தன்னுடைய அனுமதியைப் பெறாமல் தான் பேசி நடித்த வசனம் அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கவுண்டமணி குறிப்பிட்டிருக்கிறார்.
 
ஆகவே, அந்தக் காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டு உடனடியாக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.


 
1991ஆம் ஆண்டில் பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்து வெளிவந்த சின்னத்தம்பி திரைப்படத்தில் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக கவுண்டமணி நடித்திருந்தார்.
 
அந்தப் படத்தில் கவுண்டமணி தன் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து, "அப்பா.. அப்பா.. அப்பா டேய்.. ராத்திரியில நீ என்னென்ன அக்கிரமமம் பண்ணியோ, இப்ப எனக்கு பார்வை தெரியாமப் போச்சே.. அப்பன் செய்த பாவம் பிள்ளைக்குன்னு சொல்லுவாங்க. நீ செய்த பாவம் என்னை வந்து சுத்திருச்சே.. எங்கேயோ கொளுத்து வேலை செஞ்சிக்கிட்டிருந்த கம்முனாட்டி பய நீ.. உன்னால ஒன்னே ஒன்னு மிச்சமுடா.. கரெண்டு பில்லு நான் கட்னதே இல்லடா" என்ற வசனங்களைப் பேசியிருப்பார்.
 
இந்த 'கரண்ட் பில் கட்ணதேல்லடா' என்ற வசனமும் சிக்சர் படத்தின் tag lineஆக பயன்படுத்தப்பட்டுள்ளது.