வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2020 (13:50 IST)

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக தற்போது உத்தரப்பிரதேச விவசாயிகளும் மாநில எல்லையில் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியாகத் தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு போலீசார் ஆரம்பத்தில் கடுமையான முயற்சிகளை எடுத்தார்கள்.

சாலைகளில் உறுதியான தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் விவசாயிகள் சாலைத் தடுப்புகளை அகற்றியபடியே முன்னேறினர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் டெல்லியில் நுழைவதற்கு அனுமதி அளித்த போலீசார் அவர்கள் கூடுவதற்கு வடக்கு டெல்லியில் புராரி மைதானம் என்ற இடம் ஒதுக்கப்பட்டது.

விவசாயிகள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, குளிரிலும், மாசுபாட்டிலும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இது தவிர, டெல்லியைச் சுற்றியிருக்கும் பல முக்கிய சாலைகளில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை (28 நவம்பர் 2020), போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், டெல்லிக்குள் நுழைய அரசு அனுமதி கொடுத்தது.

இந்த கடும் குளிரில், பல இடங்களில் விவசாயிகள், தங்கள் டிராக்டர்களுடன் நெடுஞ்சாலைகளில் காத்திருக்கிறார்கள். டெல்லி காவல் துறை, விவசாயிகளை பெரிய மைதானங்களில் இடம் மாற்றத் தயாராக உள்ளது. தயவு செய்து விவசாயிகள் அங்கு செல்லுங்கள். உங்கள் போராட்டங்களை நடத்த காவல் துறை அனுமதி வழங்கும் என நேற்று (28 நவம்பர் 2020) உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கூறியிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாய சங்கங்கள், டிசம்பர் 3-க்கு முன்பே அரசோடு விவாதிக்க விரும்பினால், விவசாயிகள், உடனடியாக தங்கள் போராட்டத்தை, அரசு குறிப்பிட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றிக் கொண்டால் அடுத்த நாளே விவசாய சங்கங்களை அரசு சந்தித்துப் பேசும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார் அமித் ஷா.

சிங்கு எல்லைப் பகுதியிலேயே போராட்டம் தொடரும்

பஞ்சாபில் இருந்து டெல்லிக்கு வரும் சாலை ஒன்றில் சிங்கு எல்லைப் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட இடம் ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அந்த இடத்திலேயே தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்த இடம் போதாது

விவசாயிகள் போராட, புராரி மைதானத்தில் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் புராரி மைதானம் ஆயிரக் கணக்கான போராடும் விவசாயிகளுக்கு போதாது. ராம் லீலா மைதானம் போன்ற பெரிய இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர்கள் நேற்று (நவம்பர் 28) கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு புராரி மைதானம் டெல்லிக்கு வெளியே அமைந்து இருக்கிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

போராட்ட களத்தில் உத்திரப் பிரதேச விவசாயிகள்

டெல்லி உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான காசியாபாத்தில், நேற்று (நவம்பர் 28) மதியம் முதல், சில உத்தரப் பிரதேச விவசாயிகள், உபி கேட் பகுதியில் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களும் டெல்லிக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

இந்த உத்தரப் பிரதேச விவசாயிகள் அமைப்புகள் சார்பாக சுமார் 200 பேர் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் என போலீசாரே குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவர்கள், பஞ்சாப் விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களை கலைந்து போகுமாறு கூறி, காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.