1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறிய, உடல் வெப்பத்தை கணக்கிடும் கருவியைப் பொருத்த வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ஊழியர்கள் ஐந்து நாள் மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் இந்த விடுப்பை அளிப்பது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதத்தைவிட தற்போது சிங்கப்பூர் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அதீத பயம் சற்று குறைந்துள்ளதாக அங்கு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் குறிப்பிடுகிறார்.
 
"அலுவலகத்துக்கு வந்துதான் பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியும் பணிசெய்ய எங்கள் நிறுவனம் அனுமதித்துள்ளது. மற்றபடி, வெளியே சென்று வருவதில் எனக்கு பயம் ஏதும் இல்லை. பேருந்து, ரயில் பயணங்களால் கொரோனா வைரஸ் பரவும் என்கிறார்கள். ஆனால் அந்தத் தகவல் நான்  வெளியே செல்வதைத் தடுக்கவில்லை," என்கிறார் விஜய்.
 
சிங்கப்பூரில் சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முகக்கவசங்களை சொந்தச் செலவில் விநியோகிக்கின்றன. மேலும் கைகளைச் சுத்தம் செய்வதற்கான  சானிடைசர்களை (hand sanitizer) அலுவலகம் முழுவதும் ஆங்காங்கே வைத்துள்ளன.
 
"அண்மையில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் அச்சத்தையும் மீறி தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. கோவில்களில் நடந்த அன்னதானத்தில்  ஏராளமானோர் பங்கேற்றனர். கோவில்களுக்கு யாரும் முகக்கவசம் அணிந்து வருவதாகத் தெரியவில்லை," என்று சுட்டிக் காட்டுகிறார் விஜய்.
 
அதே சமயம் பொது இடங்களில் கூடுவோரின் எண்ணிக்கை சுமார் 40 விழுக்காடு அளவு குறைந்துள்ளது என்றும் கூறுகிறார்.
 
கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அந்நியத் தொழிலாளர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப் பட்டால் அந்த  காலகட்டத்துக்குரிய ஊதியத்தை சிங்கப்பூர் அரசாங்கமே தந்துவிடுகிறது என்கிறார் பொறியியலாளர் பனசை நடராஜன்.
 
கிருமித் தொற்று அச்சம் இருப்பது உண்மைதான். அதற்காக தமிழகத்தில் இருந்து வந்து பணியாற்றுவோர் ஊர் திரும்ப வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும்  அவர் கூறுகிறார்.
 
"அரசாங்கம் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அடுத்தக்கட்டப் பரிசோதனையில்  கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இல்லையெனத் தெரிய வந்தால் வீடு திரும்பலாம். எனினும் 14 நாட்களுக்கு நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள  வேண்டாம்."
 
"இந்தச் சமயத்தில் பணிக்குச் செல்லாவிட்டாலும் ஊதியம் கிடைக்கும். அதற்கான தொகையை அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு நூறு  சிங்கப்பூர் டாலர்கள் வீதம் அளிக்கிறது."
 
"பயம் காரணமாக சிங்கப்பூர் பணியை விட்டுச் செல்வதற்கு யாருக்கும் விருப்பமில்லை. இப்படித்தான் சார்ஸ் கிருமித் தொற்று ஏற்பட்ட போது திருவாரூரைச்  சேர்ந்த என் நண்பர் ஒருவர் வேலையை உதறிவிட்டுச் சென்றார். அதன் பிறகு அவருக்கு சிங்கப்பூரில் மீண்டும் வேலை கிடைக்கவில்லை. அதை நினைத்துப்  பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார்."
 
"குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு பலர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சார்ஸ், கொரோனா போன்ற பாதிப்புகள் நிலவும் சமயங்களில் நம்மை  ஊரில் இருந்து தொடர்புகொண்டு பேசும் போது, உணர்ச்சிவசப்பட நேரிடுகிறது. மனைவி, பிள்ளைகள் சென்ட்டிமென்டாகப் பேசும்போது தவிப்பாக உணர நேரிடும்."
"எனது சக ஊழியர்களின் குடும்பத்தார் ஊரில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். 'அண்ணா... எப்படியாவது அவரை ஊருக்கு அனுப்பிவிடுங்கள்...  எங்களுக்கு பயமாக இருக்கிறது' என்று அவர்கள் கெஞ்சுவதைக் கேட்கும் போது பரிதாபமாக இருக்கும். உண்மையில் இங்கு நிலைமை அந்தளவுக்கு  மோசமடையவில்லை என்பதே உண்மை," என்கிறார் பனசை நடராஜன்.
 
"பீதி உள்ளது என்றாலும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது" கொரோனா கிருமித் தொற்று குறித்து நினைக்கும்போது பீதியாக உள்ளது என்கிறார் சிங்கப்பூர்  கவிமாலை அமைப்பின் தலைவி இன்பா. "சார்ஸ் கிருமி பாதிப்பு காரணமாக சிங்கப்பூரிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை.
 
"எனக்கு பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு எப்படி சுத்தமாக இருப்பது, சுகாதாரத்தைப் பேணுவது என்று ஆசிரியர்கள் நன்றாகச்  சொல்லித் தருகிறார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பிய அடுத்த நிமிடமே கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்கிறார்கள் குழந்தைகள். காரணம் கேட்டால்,  ஆசிரியர் இவ்வாறு செய்யச் சொன்னார் என்கிறார்கள்."
 
"தேவையற்ற சந்திப்புக் கூட்டங்களை, நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டதால் எங்கள் அமைப்பின் மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தை  ஒத்தி வைத்துள்ளோம். எங்களது வாட்சப் குழுவில் ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.
 
"கொரோனாவால் எத்தனை பேருக்கு பாதிப்பு எனும் புள்ளி விவரத்தைப் பகிர்வதைவிட, எத்தனை பேர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்பதைப் பகிர்கிறோம்."
 
"எனினும் கொரோனா என்ற வார்த்தையைக் கேட்கும் போது அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 'ஆரஞ்சு' எச்சரிக்கை அறிவிப்பு 'ரெட் அலர்ட்' என்ற  நிலையை அடைந்துவிடுமோ என்ற பயம் பலருக்குள்ளது. எனினும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது," என்கிறார் இன்பா.
 
"தினமும் ஐந்தாறு முறை உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது" கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க,  வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்துகிறது. ஆனால் ஓட்டுநராக பணியாற்றும் என்னால் அப்படி இருக்க முடியாது என்கிறார்  கும்பகோணத்தைச் சேர்ந்த வை.சடையப்பன்.
 
தனியார் நிறுவனத்தில் பல்வேறு பொருட்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று விநியோகிக்கும் பணியில் உள்ள இவர், தினந்தோறும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று,  பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் ஒருவித அச்ச உணர்வுடனேயே ஒவ்வொரு நாளும் கழிவதாகச் சொல்கிறார்.
 
"எங்கள் நிறுவனம் ஊழியர்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறது. முகக்கவசம், கையுறைகள், சானிட்டைசர்கள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர். மேலும் காலையும்  மாலையும் உடல் வெப்பத்தையும் கண்டறியும் பரிசோதனை நடக்கிறது. தவிர, நாங்கள் செல்லும் ஒவ்வொரு நிறுவனத்திலும் எங்களை மீண்டும்  பரிசோதிக்கிறார்கள். தினமும் ஐந்தாறு முறை இவ்வாறு நடப்பதால் நமக்குக் காய்ச்சல் இல்லை என்பது உறுதியாகிறது. அதனால் நிம்மதியும் ஏற்படுகிறது,"  என்கிறார் வை.சடையப்பன்.
 
"ஊருக்கு வந்துவிட முடியுமா? என்று குடும்பத்தார் கவலையுடன் கேட்கிறார்கள்" தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு ஓட்டுநரான மகா.கண்ணன்.  தமிழகத்தின் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த இவரும் மனதில் கொரோனா அச்சம் இருந்தாலும், அதைப் பற்றி அதிகம் யோசிக்க நேரமில்லை என்கிறார்.
 
கட்டுமானத்துறை, கப்பல் பட்டறை போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களும் இதே மனநிலையுடன்தான் இருப்பதாகச் சொல்கிறார். "சிங்கப்பூரில் நாங்கள்  பாதுகாப்பாக இருந்தாலும், தமிழகத்தில் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தாரும் உறவினர்களும் எங்களது நிலை குறித்து கவலை கொள்கிறார்கள்."
 
"ஊருக்கு வந்துவிட முடியுமா? கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகு சிங்கப்பூர் செல்லலாம் என்று ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் பேசும்போது என்  மனைவி தவிப்புடன் கேட்கிறார். என் பிள்ளைகளுக்கும் விவரம் தெரியும் வயது என்பதால் என்னைப் பற்றி கவலை கொள்கிறார்கள்."
 
"சக ஊழியர்களுக்கும் கொரோனா குறித்த பயம் இருக்கவே செய்கிறது. நான் குடும்பத்தாருடன் பேசி முடித்து ஆசுவாசம் அடைவதற்குள் சக ஊழியருக்கு  தொலைபேசி அழைப்பு வரும். அவர் உணர்வுப்பூர்வமாகப் பேசுவதைக் கண்டதும் எனக்கு மீண்டும் மனத்தவிப்பு ஏற்படும். எனினும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகப்  பேசி நம்பிக்கையூட்டி, அடுத்த நாள் பணிக்குத் தயாராகிறோம்," என்கிறார் மகா.கண்ணன்.